Tamilnadu
“அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 35 லட்சம் ரூபாய் பணமோசடி” : அ.தி.மு.க முன்னாள் அமைச்சரின் உறவினர் கைது!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா கடையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி குணசேகரன். இவர், கடந்த 2018ஆம் ஆண்டு பொன்னங்குப்பத்தைச் சேர்ந்த பாக்யராஜ் மூலம், அப்போதைய சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவின் அக்காள் மகனான, சென்னை அசோக் நகரைச் சேர்ந்த முனுசாமி மகன் ரமேஷ்பாபு என்பவருக்கு அறிமுகமானார்.
அப்போது குணசேகரன், பாக்யராஜ் ஆகிய இருவரிடமும் ரமேஷ்பாபு, தன்னுடைய சித்தி சரோஜா மூலமாக, யாராவது அரசுப்பணியில் சேர விரும்பினால் அவர்களின் இன்டர்வியூ அட்டையை கொடுத்தால், அரசு பணிக்கு தகுந்தவாறு குறிப்பிட்ட தொகையை பெற்று உறுதியாக வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
இதனை நம்பி, கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை குணசேகரன் தனது உறவினர் மற்றும் தெரிந்த 17 பேருக்கு சத்துணவு அமைப்பாளர், அங்கன்வாடி பணியாளர், கிராம உதவியாளர் ஆகிய அரசு வேலைகளுக்காக ரமேஷ்பாபு கூறியதுபடி, அவரது வங்கி கணக்கிலும், அவரது முதல் மனைவி சூரியவர்ஷினி, 2ஆவது மனைவி ரேவதி, ரமேஷ்பாபுவின் மாமா சவுந்தர்ராஜன் ஆகியோரின் வங்கி கணக்கிலும் மற்றும் ரேவதி, ரமேஷ்பாபு ஆகியோரிடம் நேரடியாகவும் என, மொத்தம் ரூ.35 லட்சத்தை கொடுத்துள்ளனர்.
பணத்தை பெற்ற ரமேஷ்பாபு உள்ளிட்டோர் கடந்த 2 ஆண்டு காலமாக மேற்கண்ட 17 பேருக்கும், அரசு வேலை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் குணசேகரன், பலமுறை ரமேஷ்பாபுவை நேரில் சந்தித்தும், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும், அவர்கள் 17 பேருக்கும் அரசு வேலை வாங்கித் தரும்படியும், இல்லையெனில் தான் கொடுத்தப் பணத்தை திருப்பித் தரும்படியும் கேட்டுள்ளார்.
ஆனால் ரமேஷ்பாபு, அவர்கள் 17 பேருக்கும் அரசு வேலை வாங்கிக் கொடுக்கவில்லை, பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதுபற்றி, மீண்டும் கடந்த 20.03.2021 அன்று ரமேஷ்பாபுவை குணசேகரன் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, பணம் பெற்ற விவரத்தை பற்றி யாரிடமும் சொன்னால் குடும்பத்தோடு கொலை செய்து விடுவதாக, ரமேஷ்பாபு மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து குணசேகரன், விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். இதையடுத்து இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும்படி, மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டார்.
அதன்பேரில், ரமேஷ்பாபு உள்ளிட்ட 4 பேர் மீது நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் இன்று துணை போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார், ரமேஷ்பாபுவை கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!