Tamilnadu

“உங்களின் முன்னெடுப்பு எங்களை நிம்மதி அடையச் செய்திருக்கிறது”: முதல்வருக்கு நன்றி கூறிய நடிகர் நாசர்!

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள, ஒளிப்பதிவு திருத்தச் சட்டம் 2021-ஐ அமல்படுத்துவதற்கு எதிராக நாடு முழுவதும் சினிமா பிரபலங்கள் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் வெற்றிமாறனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா, கார்த்திக் மற்றும் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ உள்ளிட்ட பலரும் அந்தச் சட்டத்திருத்தத்துக்கு எதிராக தனது நிலைபாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதாவைத் திரும்பப் பெறுமாறும், இது தொடர்பான முயற்சிகளைக் கைவிடுமாறும் கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்தகைய நடவடிக்கை திறைத்துறையினர் மத்தியில் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக சினிமா பிரபலங்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதா தொடர்பாக தமிழக முதல்வரின் முன்னெடுப்பிற்கு நடிகர் நாசர் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நடிகர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:- “சமுதாய முன்னேற்றத்திற்குத் திரைப்படங்கள் ஒரு முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது, இருக்கிறது என்பதை வரலாற்று ஏடுகள் நம்மை ஞாபகப்படுத்துகின்றன.

இந்திய வரலாற்றில் சுதந்திரப் போராட்டத்தின்போது அக்காலத் திரைப்படங்கள் அவ்வுணர்வை மக்களிடையே பரவச் செய்ததற்கான சாட்சிகள் கருப்பு, வெள்ளைப் படங்களாக இன்றும் காணக் கிடைக்கின்றன. குறிப்பாக தமிழகத்தில் சமுதாயத் தீர்வைக் கொண்டுவந்ததில் திரைப்படங்கள் பெரும் பங்கு ஆற்றியிருக்கின்றன.

இன்றைய சூழலில் ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதா பல கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பி இருக்கிறது. ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் தணிக்கை முறையே போதுமானதாக இருந்தும், இப்புதிய சட்டம் படைப்பாளிகளின் கருத்துகளை முடக்கும் வண்ணமாய் இருக்கிறது.

தமிழக மக்களின் பிரதிநிதியாய் இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இவ்விஷயம் குறித்து துறை சார்ந்தவர்களின் கவலையை ஆழமாகக் கேட்டறிந்து அதற்கான முன்னெடுப்பும் எடுத்திருக்கிறார் என்பது எங்களை நிம்மதி அடையச் செய்வதாக இருக்கிறது. அவருக்கு நடிகர் சமூகத்தின் சார்பாக நன்றி சொல்வது நம் கடமை. முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்”

Also Read: “ஜெர்மனியின் கொலோன் பல்கலை. தமிழ்த்துறைக்கு ரூ.1.25 கோடி நிதியுதவி”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!