Tamilnadu

வங்கியில் இருந்து எடுத்த ₹3 லட்சத்தை லாவகமாக அபேஸ் செய்த இருவர் - பட்டப்பகலில் அரங்கேறிய திருட்டு சம்பவம்

சென்னை பல்லாவரம், பம்மல் ரோட்டில் உள்ள எச்.டி.எப்.சி வங்கியில் ஆலிம் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டின் அக்கவுண்டண்ட் பசீர் (26) என்பவர் 2 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்தார். அதே போல் அவருடன் வந்திருந்த மீரா மொய்தீன் என்பவர் ஐ.டி.பி.ஐ வங்கியில் இருந்து 1 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்தார்.

மொத்தம் 3 லட்ச ரூபாயையும் ஒரு பையில் போட்டு இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியில் வைத்துக் கொண்டு பல்லாவரத்தில் இருந்து சூளைமேட்டிற்கு செல்வதற்கு முன், பல்லாவரம் கண்டோன்மெண்ட், சர்ச் ரோட்டில் உள்ள ஜூஸ் கடை ஒன்றில், இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு கடைக்கு சென்றிருக்கிறார்.

வங்கியில் பணம் எடுப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், பின் தொடர்ந்து வந்து நேரம் பார்த்து ஜூஸ் குடிக்க சென்ற போது, தலைக்கவசம் அணிந்திருந்த ஒருவர் வாகனத்தின் முன் வந்து நிற்க, மற்றொருவர் அவருக்கு எதிர்புறம் நிற்க, இருவரும் யாரும் பார்க்காத நேரத்தில் சீட்டுக்கு அடியில் இருக்கும் பணத்தை திருட முயற்சித்தனர்.

அந்த நேரத்தில் கொள்ளையடிக்க முயன்றவர்களிடம் யாசகம் கேட்டு அந்த இடத்தில் ஒரு பெண்மணி வந்துள்ளார். தலைக்கவசம் அணிந்திருந்த நபர் அப்பெண்மணியை அங்கிருந்து விரட்டுவதிலேயே குறியாக இருந்தது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

பின்னர் அப்பெண்மணி அங்கிருந்து சென்றவுடன் சிறிது நேரத்தில் இருசக்கர வாகனத்தின் சீட்டை ஒருவன் தூக்கிப்பிடிக்க, மற்றொருவன் கையை உள்ளே விட்டு பணப்பையை லாவகமாக எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்கின்றார்.

இருவரும் ஜூஸ் குடித்துவிட்டு இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு சூளைமேட்டிற்கு சென்று பார்த்த போது பணம் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் ஜூஸ் கடை அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்த போது இருவர் இருசக்கர வாகனத்தில் இருந்து பணத்தை கொள்ளையடித்து செல்வது பதிவாகியிருந்தது. சிசிடிவி காட்சிகளுடன் பல்லாவரம் காவல் நிலையத்தில் பசீர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Also Read: கஞ்சா விற்ற அ.தி.மு.க நிர்வாகி... 5 பேரை கையும் களவுமாகப் பிடித்த போலிஸ்!