Tamilnadu

“தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக, காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களைப் பேணிக் காத்திடவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், 1989ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 13ஆம் நாள் அன்று, அப்போதைய முதல்வர் கலைஞரால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது.

அதற்குப் பிறகு, 2010ஆம் ஆண்டு, மீண்டும் கலைஞரால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையச் சட்டம், 2010 (Act 21 of 2010)-ன்படி, சட்டபூர்வ அதிகாரம் பெற்ற ஆணையமாகச் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மையினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காகச் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருத்தியமைத்து, அதன் தலைவராக எஸ்.பீட்டர் அல்போன்ஸை நியமித்து, உத்தரவிட்டுள்ளார்.

எஸ்.பீட்டர் அல்போன்ஸ் 1989 மற்றும் 1991-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்தும், 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கடையநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்தும் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “அ.தி.மு.க ஆட்சியின் தகிடுதத்தங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த சி.ஏ.ஜி அறிக்கை” : முரசொலி தலையங்கம்!