Tamilnadu

“நோய் தொற்று பரவிட மீண்டும் வழிவகுத்தால், ஊரடங்கு மீண்டும் வரலாம்” : எச்சரிக்கும் ‘தினகரன்’ தலையங்கம் !

தமிழக அரசு நமக்கு அளிக்கும் தளர்வுகள் வெற்றியை நோக்கிச் சென்றால் மட்டுமே, அடுத்து சுற்றுலா தலங்கள் திறந்திட முடியும் என தினகரன் நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

‘தினகரன்’ நாளேடு வெளியிட்டுள்ள தலையங்கம் பின்வருமாறு:-

கடந்த 2 மாதங்களாக கொரோனாவோடு மல்லுக்கட்டிய தமிழகம், மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறது. 27 மாவட்டங்களில் இன்று முதல் பஸ் போக்குவரத்து தொடங்குகிறது. இம்மாவட்டங்களில் இ- பாஸ் இல்லாமல் கூட இனி பயணிக்க முடியும். பாத்திரக் கடைகள் தொடங்கி, அழகு சாதன கடைகள் வரை, போட்டோ ஸ்டூடியோ தொடங்கி ஜெராக்ஸ் கடைகள் வரை இன்று முதல் 27 மாவட்டங்களில் திறக்கப்படுகின்றன.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று முதல் வழிபாட்டு தலங்களும் திறந்து விடப்படுகின்றன. எப்படி பார்த்தாலும் இன்று தொடங்கும் பஸ் போக்குவரத்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் பிள்ளையார் சுழியிடுவது போன்றதுதான். சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட நகரங்கள் கடந்த வாரமே இயல்பு நிலைக்கு வந்து விட்டன. அரசு பஸ்களில் 50 சதவீத இருக்கைகள் என்ற விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிப்பது கடினமே. கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு பயணிகள் வருகையும், அரசு, தனியார் அலுவலகங்களுக்கு ஊழியர்கள் வருகையும் இன்று முதல் களைக்கட்டும்.

ஊரடங்கில் மூடிக்கிடந்த பல்வேறு கடைகள் திறக்கப்படும் நிலையில், கடைகளுக்கான ஊழியர்களும், ஓட்டல், கட்டுமானம் என பல்வேறு இடங்களில் பணியாற்றும் தொழிலாளர்களும் இன்று முதல் இயல்பு வாழ்க்கைக்கு பயணிப்பதால், கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கொரோனா இரண்டாம் கட்ட அலை முற்றிலுமாக ஓயாத நிலையில், பொதுமக்கள் இனிமேல்தான் கவனத்தோடு செயல்பட வேண்டும். அரசு அறிவித்துள்ள தளர்வுகளில் அலட்சியம் காட்டும்போது, நோய் பாதிப்பு எப்போது வேண்டுமானாலும் உயர வாய்ப்புள்ளது.

எனவே பொதுமக்கள் நிலையை உணர்ந்து கொண்டு, அரசின் விதிமுறைகளை பின்பற்றி நடப்பதே நல்லது. தமிழகத்தில் அடுத்தக்கட்ட டெல்டா பிளஸ் வைரஸ் மதுரை, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் ஏற்கனவே தென்பட தொடங்கிவிட்டது. அந்த வைரஸ் வீரியம் கொள்ள பொதுமக்களே காரணமாகி விடக்கூடாது. 3ம் கட்ட அலைக்கு நமது நடவடிக்கைகள் தூபம் இடக்கூடாது.

பொதுபோக்குவரத்து தொடங்கினாலும் முக கவசம், கிருமிநாசினி பயன்பாடுகளை தொடர்ந்து பின்பற்றிட வேண்டும். கூட்டம் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை அவசியம் கடைப்பிடிப்பது நல்லது. அவசியமற்ற பயணங்களை தவிர்த்தல், தேவையற்ற நிகழ்ச்சிகளை தள்ளி வைத்தாலே கூட்டம் கூடுவதை தவிர்க்கலாம். மார்க்கெட் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் அனைவரும் காலை நேரத்தில் கூட வேண்டிய அவசியமில்லை.

பஸ் நிலையங்கள், ரேஷன் கடைகளுக்கு செல்லும்போது பொதுமக்களுக்கு அதிக கவனம் தேவையாகும். தமிழக அரசு நமக்கு அளிக்கும் தளர்வுகள் வெற்றியை நோக்கிச் சென்றால் மட்டுமே, அடுத்து சுற்றுலா தலங்கள் திறந்திட முடியும். நோய் தொற்று பரவிட மீண்டும் வழிவகுத்தால், ஊரடங்கு மீண்டும் வரலாம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: மீனவர்களுக்கு ஒன்றிய அரசு தரும் நிதியைப் பெறத் தவறி - ரூ.92.66 கோடி இழப்பை ஏற்படுத்திய அ.தி.மு.க அரசு!