Tamilnadu

"தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் அளித்தால் நடவடிக்கை" : அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!

திருச்சி மாவட்டம், எடமலைப்பட்டிப்புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, பள்ளியின் கழிப்பறை, வகுப்பறை உட்பட பள்ளி முழுவதையும் பார்வையிட்ட ஆய்வு செய்தார். பின்னர் தொடக்கப் பள்ளியில் 100-வது மாணவர் சேர்க்கையைத் தொடங்கிவைத்து, மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ''அரசுப் பள்ளியில் படிப்பதை வறுமையாக நினைக்காமல், பெருமையாக அனைவரும் கருதுகின்றனர். இந்த ஆண்டு சி.பி.எஸ்.இ மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து அதிகமான மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்து வருவதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

அரசுப் பள்ளிகள் மீது நம்பிக்கை வைத்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கிறார்கள். எனவே, அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு நிச்சயம் மேற்கொள்ளும்.

தனியார் பள்ளிகளில் அதிக கல்விக் கட்டணம் வசூலிப்பதாகப் புகார் கொடுத்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோர் தைரியமாகப் புகார் அளிக்க முன்வர வேண்டும். அதுமட்டுமன்றி அந்தப் பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்தி, புகார் உண்மையெனக் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நீட் தேர்வு ரத்து தொடர்பாக ஏற்கனவே அறிவித்தபடி பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும். நீதிபதி ஏ.கே.ராஜன் குழு பரிந்துரைக்குப் பிறகு மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் '' எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: "தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு பிறகே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை" : அமைச்சர் பொன்முடி விளக்கம்!