Tamilnadu

“தையல் மெஷின் வழங்கி படிப்பு செலவையும் ஏற்றுக் கொண்ட அமைச்சர் சிவசங்கர்” : பழங்குடியின மாணவி நெகிழ்ச்சி!

தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் எஸ்.எஸ். சிவசங்கர். இவர் சமீபத்தில் அரியலூர் மாவட்டம் செந்துறையில் பொதுமக்களைச் சந்தித்து மனுக்களைப் பெற்றார்.

அவரிடம் பழங்குடியின மாணவி சந்திரா என்பவர் உதவி வேண்டி அமைச்சரிடம் மனு அளித்தார். அமைச்சரிடம் அப்பெண், தான் 12ஆம் வகுப்பு வரை படித்திருப்பதாகவும், மேற்படிப்பு படிக்க வசதி இல்லாத காரணத்தால் தனது படிப்பை நிறுத்திவிட்டதாகவும், தனது வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் தனக்கு ஒரு தையல் மிஷின் வழங்கி உதவுமாறும் கோரிக்கை விடுத்தார்.

அப்பெண்ணின் கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், “தையல் மெஷின் வாங்கித்தருகிறேன்… ஆனால், அதையே நம்பினால், காலம் முழுவதும் தையல் மெஷினே வாழ்க்கையாகிடும். அதனால், மேற்படிப்புக்கு உதவியும் செய்கிறேன். நன்றாக படித்து நாலு பேருக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும்” என்று வாழ்த்தினார்.

இந்நிலையில், இன்று மாணவியின் வீட்டிற்கு சென்ற பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மாணவிக்கு தையல் மெஷினை வழங்கி மேற்கொண்டு படிப்பதற்கான செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்தார்.

இது குறித்து மாணவி சந்திரா தெரிவிக்கையில், “எங்கள் இனத்தில் பள்ளிப்படிப்பை கூட பலர் மேற்கொள்ளாத சூழலில் நான் கடந்த 2019 - 20 ஆம் ஆண்டில் பிளஸ் டூ தேர்வில் 371 மதிப்பெண்கள் பெற்று இருந்த நிலையிலும் படிக்க வசதி இல்லாததால் கடந்த ஆண்டு கல்லூரியில் சேரவில்லை.

ஆனால், தற்போது அமைச்சர் படிப்பதற்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாக கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க உள்ளேன். எனக்கு படிப்பதற்கான செலவுகளை ஏற்றுக் கொண்டு மேலும் குடும்ப வருமானத்திற்காக தையல் மிஷின் வழங்கிய அமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: புதுச்சேரி: எம்.எல்.ஏவுக்கு அமைச்சர் பதவி கேட்டு பாஜக அலுவலகத்தையே அடித்து நொறுக்கிய பா.ஜ.க தொண்டர்கள் !