Tamilnadu

“மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சரின் முடிவை செயல்படுத்த சட்டத்துறை தயாராக உள்ளது” : அமைச்சர் ரகுபதி

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழ்நாடு முழுவதும் கோயில்கள் திறக்கப்படாமல் இருப்பதால் தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஒரு கால பூஜை செய்யும் அர்ச்சகர் மற்றும் பூசாரிகளுக்கு கொரோன நிவாரண தொகையாக நான்காயிரம் ரூபாயும்‌ 14 வகை மளிகைப் பொருட்களும் வழங்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி இன்று புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 299 கோவில்களில் ஒரு கால பூஜைகள் செய்யும் அர்ச்சகர் மற்றும் பூசாரிகளுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிவாரண தொகையாக 4,000 ரூபாயும் 14 வகை மளிகைப் பொருட்களையும் வழங்கினர்.

அப்போது பேசிய அமைச்சர் ரகுபதி, “தமிழ்நாடு அரசு அனைவருக்கும் சொந்தமான அரசு, மத உணர்வுகளை எப்போதும் புண்படுத்தாது. அவரவர் மதத்தினர் அவரவர் கடவுள்களை கும்பிடலாம். அனைத்து மதத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்கக்கூடிய அரசு. அனைவரும் அனைத்தும் பெற வேண்டும் இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகின்றது” என்று தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ரகுபதி பேசுகையில், “மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வார். எந்த நடவடிக்கையை எடுக்க சொல்கிறாரோ அதைச் செய்வதற்கு அதற்கு சட்டத்துறை தயாராக உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர், அரசு அட்வகேட் ஜெனரல் சட்ட வல்லுனர்கள் உள்ளிட்டோரிடம் கலந்து பேசி முடிவு எடுப்பார். அதை சட்டத்துறை நிறைவேற்றும்” என்று தெரிவித்தார்.

Also Read: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த கூட்டாட்சியின் குரல்.. காழ்ப்புணர்ச்சியின்றி ஏற்றுக்கொள்வாரா PM மோடி ?