தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த கூட்டாட்சியின் குரல்.. காழ்ப்புணர்ச்சியின்றி ஏற்றுக்கொள்வாரா PM மோடி ?

முதல்வர் முன்வைத்துள்ள கோரிக்கைகளை காழ்ப்புணர்ச்சியின்றி பிரதமர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தீக்கதிர் தலையங்கம் வலியுறுத்தியுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த கூட்டாட்சியின் குரல்.. காழ்ப்புணர்ச்சியின்றி  ஏற்றுக்கொள்வாரா PM மோடி ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அரசியல் சட்டம் நிர்ணயித்துள்ள கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்ற அணுகுமுறையோடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக தீக்கதிர் நாளிதல் தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

‘தீக்கதிர்’ நாளிதழில் வெளியான தலையங்கம் பின்வருமாறு:-

“தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக பிரதமர் நரேந்திர மோடியை தலைநகர் டெல்லியில் சந்தித்து உரையாடியுள்ளார். தமிழ்நாட்டின் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை அவர் ஒன்றிய அரசிடம் முன்வைத்துள்ளார்.

குறிப்பாக நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்து நுழைவு தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும், தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை தடையின்றி வழங்க வேண்டும், செங்கற்பட்டு மற்றும் ஊட்டியில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் தொழிற்சாலைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை உடனடியாக துவக்க வேண்டும், ஜி.எஸ்.டி வரி பாக்கியை முழுமையாக வழங்க வேண்டும், தமிழகத்திற்கு வர வேண்டிய நிதியாதாரங்களை தாமதமின்றி தரவேண்டும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் மேகதாது அணைத் திட்டத்திற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும். முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தமிழகத்தின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளன. தமிழக நலன் சார்ந்த இந்த கோரிக்கைகளோடு ஒன்றிய, மாநில அரசுகளுக்கிடையிலான உறவை ஆண்டான் - அடிமை என்ற நிலையிலிருந்து பார்க்காமல் அரசியல் சட்டம் நிர்ணயித்துள்ள கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்ற அணுகுமுறையோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த கூட்டாட்சியின் குரல்.. காழ்ப்புணர்ச்சியின்றி  ஏற்றுக்கொள்வாரா PM மோடி ?

குறிப்பாக இடஒதுக்கீட்டு அளவை மாநிலங்களே தீர்மானித்துக் கொள்ளும் உரிமை, குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து, மூன்று வேளாண் சட்ட திருத்தங்களை திரும்பப் பெறுவது, புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறுவதோடு நாடு முழுவதும் இலவச கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் தமிழக அரசின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் அட்டியின்றி அல்லது சிறு முணுமுணுப்புகளோடு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏற்றுக் கொள்ளப்பட்டவையாகும். சட்டமன்றத் தேர்தலில் இதனால்தான் அ.தி.மு.கவையும், பா.ஜ.கவையும் தமிழக மக்கள் ஒருசேர நிராகரித்தனர்.

ஒன்றிய, மாநில அரசுகளுக்கிடையிலான உறவுகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டே வந்துள்ளன. மாநிலங்களின் அதிகாரங்களை ஒன்றிய அரசு கொஞ்சம் கொஞ்சமாக பறித்து வந்துள்ளது. குறிப்பாக நரேந்திர மோடி அரசு பொறுப்பேற்றபிறகு கல்வி, சுகாதாரம், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாநில உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.

மறுபுறத்தில் ஒன்றிய அரசின் ஒற்றை அதிகாரத்தை திணிக்கும் பல்வேறு திட்டங்கள் தொடர்ச்சியாக புகுத்தப்படுகின்றன. இந்த நிலையில், தமிழக முதல்வர் முன்வைத்த கோரிக்கைகள் ஆரோக்கியமான ஒன்றிய, மாநில உறவுகளை பேணுவதற்கான செயல்திட்டமாக உள்ளது. முதல்வர் முன்வைத்துள்ள கோரிக்கைகளை காழ்ப்புணர்ச்சியின்றி பிரதமர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.”

banner

Related Stories

Related Stories