Tamilnadu

2 நாள் அரசு முறை பயணமாக டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - பிரதமர் மோடியுடன் இன்று ஆலோசனை !

தமிழ்நாட்டு முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி சென்றுள்ளார். 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் ஆகியோரை சந்தித்து தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பாக வழியுறுத்தவுள்ளார்.

குறிப்பாக, மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசுகிறார். அப்போது, செங்கல்பட்டில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளை தொடங்குவது தொடர்பாகவும், நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் விவகாரம், ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை, தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ள ஒன்றிய அரசு திட்டங்கள், கொரோனா, கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகள், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவாதிக்கிறார். இது தொடர்பாக கோரிக்கை மனுவையும் அளிக்கிறார்.

இந்நிலையில், பிரதமர் மோடியை சந்திப்பதற்காக, இன்று காலை 7.30 மணி அளவில் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து கார் மூலம் சென்னை விமான நிலையம் சென்று, அங்கிருந்து, சிறப்பு விமானத்தில் டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, விமான நிலையத்தில் தி.மு.க எம்.பி-க்கள், தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் விமானத்தில் அவருடைய தனிச்செயலாளர்கள் உதயச்சந்திரன், உமாநாத் உள்ளிட்ட ஒருசில முக்கிய அதிகாரிகள் மட்டுமே உள்ளனர்.

Also Read: கடந்த 4 வருடங்களில் ரூ.7 லட்சம் கோடி கடன் தள்ளுபடி.. பெரு முதலாளிகளின் மனதை குளிர்விக்கும் மோடி அரசு!