Tamilnadu

7 அமைச்சர்கள் பங்கேற்று டெல்டா பாசனத்துக்காக கல்லணை திறப்பு... 3.10 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் 12ஆம் தேதி காலை டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையைத் திறந்து வைத்தார். காவிரி நீர் கல்லணைக்கு இன்று (ஜூன் 16) அதிகாலை வந்தடைந்தது.

இதைத்தொடர்ந்து, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களின் பாசனத்துக்காக கல்லணையிலிருந்து இன்று காலை 9.15 மணியளவில் நீர் திறந்துவிடப்பட்டது.

இவ்விழாவில் அமைச்சர்கள் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி.செழியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “கல்லணைக்கு தண்ணீர் வருவதைப் பொறுத்து, காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாயில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு அதிகப்படுத்தப்படும்.

கல்லணையிலிருந்து தற்போது திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடைமடைப் பகுதிக்குச் செல்ல 10 நாட்கள் ஆகும். தூர்வாரும் பணி இதுவரை 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தண்ணீர் சென்றடைவதற்குள் 100 சதவீத பணிகள் முடிவடைந்து விடும்.

இந்தப் பாசனத்தின் மூலம், தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.04 லட்சம் ஏக்கரும், திருவாரூர் மாவட்டத்தில் 89 ஆயிரம் ஏக்கரும், நாகை மாவட்டத்தில் 5,000 ஏக்கரும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 96 ஆயிரம் ஏக்கரும், கடலூர் மாவட்டத்தில் 16,000 ஏக்கரும் என மொத்தம் 3.10 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: 20 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் திறப்பு : தூத்துக்குடி விவசாயிகளுக்கு நம்பிக்கை ஒளி பாய்ச்சிய தமிழக அரசு!