இரா.முத்தரசன்
Tamilnadu

“டாஸ்மாக் கடைகள் திறப்பு குறித்து பா.ஜ.கவினர் இரட்டை வேடம் போடுகின்றனர்” : இரா.முத்தரசன் கடும் விமர்சனம்!

பெண் காவலர்கள் முதல்வரின் பயண பாதுகாப்பு பணியில் ஈடுபட கூடாது என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கொரோனா இரண்டாம் அலை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு மிகவும் சிறப்பாக கையாண்டதால் தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்திட மேற்கோள்ள வேண்டிய நடவடிக்கைகள், ஊரடங்கு நீடிப்பது, 12ம் வகுப்பு தேர்வு ரத்து போன்ற பல்வேறு நடவடிக்கை குறித்து அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனை கேட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

ஜனநாயக போக்குடன் சிறப்பாகவும், பாராட்டும் வகையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் என்று பாராட்டினார். கடந்த ஆட்சியின் போது முதல் அலையில் அனைத்து அரசியல் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அனைத்து கட்சியினர் கேட்ட போது அவர்கள் என்ன மருத்துவர்களா என்று கேள்வி கேட்டு ஏளனம் செய்யபட்ட நிலையில், தற்போது அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட குழு அமைத்து கொரோனா பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதும், கொரனாவை கட்டுக்குள் கொண்டு வர எடுக்கும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது.

முத்தரசன்

ஒன்றிய அரசு குறிப்பாக மோடி கொள்கை இல்லாதவராக செயல்பட்டு வருகிறார். தடுப்பூசி போட்டு கொள்வதில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வரும் நிலையில், தடுப்பூசி கொடுப்பதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டி வருகிறது. தடுப்பூசி உற்பத்தி செய்திட அனுமதி கேட்டு இது வரை பதில் அளிக்காமல் ஒன்றிய அரசு இருப்பது கண்டிக்கத்தக்கது. தடுப்பூசி உற்பத்தி செய்திட ஒன்றிய அரசு முன் வர வேண்டும் அல்லது மாநில அரசுக்கு அனுமதி வழங்க வேண்டும்.

டாஸ்மாக் கடைகள் திறப்பு குறித்து பா.ஜ.கவினர் இரட்டை வேடம் போடுகின்றனர். கர்நாடகா மற்றும் பாண்டிசேரிகளில் கடைகள் திறந்து உள்ளதை பற்றி பேசாமல், தற்போது தமிழகத்தில் மட்டும் பேசுவது என்பது, இந்த அரசின் மீது எந்த குறையும் சொல்ல முடியாத நிலையில் இதையாவது சொல்லலாமே என்ற எண்ணத்தில் சொல்கின்றனர். இது மக்களிடம் எடுபடாது.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், முதல்வரின் பாதுகாப்பு பணியில் பெண் காவலர்கள் நியமிக்க கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவு மிகவும் வரவேற்க தக்கது என்றார். பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்திட வேண்டும் என்று போராட்டம் நடத்தியதாகவும், விரைவில் மிக பெரிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

Also Read: “கொரோனா விவகாரத்தில் கோழையை போல் செயல்படுகிறார் பிரதமர் மோடி” : பிரியங்கா காந்தி கடும் விமர்சனம்!