Tamilnadu

உயிருக்கு போராடிய ஒன்றரை வயது குழந்தையை காப்பாற்றிய காவலர்கள்.. மனிதநேயமிக்க செயலுக்கு குவியும் பாராட்டு!

திருவாரூர் மாவட்டம் சன்னாநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி. இவரது மனைவி மெல்மா. இவரது ஒன்றரை வயது குழந்தை சுகன்யாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டு உடல்நலக் குறைவால் மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, சன்னாநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் ரிப்பேர் ஆகி நின்றுள்ளது.

திடீரென குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் ஆட்டோ கார் எதுவும் இல்லாத நிலையில், குழந்தையை கையில் வைத்துக்கொண்டு அழுது கொண்டு சாலையோரம் நின்றுள்ளனர்.

அப்போது அங்கு ரோந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் போலிஸார் உடனடியாக ரோந்து வாகனத்தில் குழந்தையை அழைத்துக்கொண்டு நன்னிலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

அப்போது அந்த மருத்துவர் சரியான நேரத்தில் குழந்தையை கொண்டு வந்ததால் குழந்தையை காப்பாற்ற முடிந்தது என்று கூறியுள்ளார். இதனால் பொதுமக்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசனும் போலிஸாரை பாராட்டியுள்ளனர். மேலும் காவலர்களின் மனித நேய செயலுக்கு அப்பகுதி மக்கள் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுத்த தி.மு.க MLA.. உறவினர்கள் பாராட்டு!