Tamilnadu

“இடைத்தரகர்கள் தலையீடு இருந்தால் துறைரீதியாக கடும் நடவடிக்கை” : பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் ஊரடங்கு இருப்பதால், அரசு அலுவலகங்கள் குறைவான எண்ணிக்கையில் செயல்பட்டு வருகிறது. இதன்படி பத்திரப்பதிவு அலுவலகத்தில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என மதுரை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆய்வு செய்து வருகிறார்.

மதுரை மாவட்டம், ஒத்தக்கடை, சோழவந்தான், அலங்காநல்லூர் பகுதியில் உள்ள ஆறு பத்திரப்பதிவு அலுவலகங்களில் அமைச்சர் மூர்த்தி ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மூர்த்தி, “கொரோனா பரவலைத் தடுக்க, சமூக இடைவெளியைப் பின்பற்றி பத்திர பதிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறன்றன. மேலும் அலுவலகங்களில கூட்டங்களை தவிர்க்க டோக்கன் வழங்கவும், ஒலிபெருக்கி மூலம் டோக்கன் எண், பெயர், பதிவு நடக்கும் நேரம் பற்றிய விவரங்களைப் பதிவுதாரர்களுக்குத் தெரிவிக்க ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவரங்கள் அனைத்தும் அலுவலகத்தின் முகப்பில் மின்னணுத் திரையில் தெரிய வேண்டும். இந்த நேரத்துக்கு வந்ததும் உடனே பதிவு செய்து மக்களை அனுப்பிவிட வேண்டும். அவர்கள் அதிகநேரம் காத்திருக்கும் நிலை இருக்கக் கூடாது.

மாநிலத்திலுள்ள 575 பதிவு அலுவலகங்களிலும் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும். மேலும் பத்திர எழுத்தர்கள், பதிவாளர்கள் இடையே இடைத்தரகர்களை பயன்படுத்தக் கூடாது. லஞ்சம் மற்றும் இடைத்தரகர்கள் தலையீடு இருந்தால் துறைரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்களிடம் நியாயமான கட்டணம் மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும். இது குறித்து 575 பதிவு அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக முன்னறிப்பு இன்றி அடிக்கடி ஆய்வு நடத்தப்படும்" என்றார்.

Also Read: நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுத்த தி.மு.க MLA.. உறவினர்கள் பாராட்டு!