Tamilnadu
“5 பவுன் வரை நகைக்கடன் தள்ளுபடி குறித்து விரைவில் அரசாணை வெளியாகும்” : அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி!
தென்மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குதல், உர விநியோகம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கூட்டுறவுத்துறை பதிவாளர் சுப்ரமணியன், ஆட்சியர் அனீஷ் சேகர், மற்றும் தென் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் கொரோனா நிவாரண நிதி, மளிகைப் பொருட்கள் தொகுப்பு ஆகியவை மக்களுக்கு தடையின்றி, விரைவாக சென்று சேர்வதற்கு தேவையான ஆலோசனைகளும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறுகையில், “விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக கடன்கள் வழங்க ரூ. 11,500 கோடிக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, குறைபாடு இல்லாமல் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. அதை செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
2.10 கோடி ரேஷன் அட்டை தாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி, மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்குவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. இந்த அரசு எல்லா துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு, ஏழை எளிய மக்களுக்கு முழுமையாக அரசின் திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் தீவிரமாக இயங்கி வருகிறோம்.
மழையால் சேதமடையும் விளை பொருட்கள் குறித்து தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பேரிடர் பாதிப்புக்கு உள்ளாகும் விவசாயிகளுக்கு உடனே உரிய நிவாரணம் வழங்கப்படும். அதேபோல், கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் வரை நகை கடன் தள்ளுபடி குறித்த அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும்.
மேலும், கடந்த ஆட்சியில் விவசாயிகள் அல்லாதவர்களுக்கு தள்ளுபடி கொடுத்து உள்ளதாக நிறைய புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. அது குறித்து ஆய்வு செய்து, தவறு நடந்தது உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு பணிகளில் சேர்வதற்கான கடந்த ஆட்சியில் நேர்காணல் முடிந்தவர்கள் விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு பணி ஆணை வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!