Tamilnadu

"கருப்பு பூஞ்சைக்கான மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்றால் உடனடி கைது" : அமைச்சர் கே.என்.நேரு எச்சரிக்கை!

முத்தமிழறிஞர் கலைஞரின் 98வது பிறந்தநாளை முன்னிட்டும், சுற்றுச்சூழல் நாளையொட்டி வனத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், திருச்சி மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் பணி நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், "கருப்பு பூஞ்சைக்கான மருந்து மருத்துவமனைகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த நோய்க்கான மருந்து வெளிச்சந்தையில் தரப்படுவதில்லை. திருச்சி மாவட்டத்துக்கு 50 மருந்துகள் மட்டுமே வந்தன. இவை சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

கள்ளச்சந்தையில் கருப்பு பூஞ்சைக்கான மருந்து விற்பதாக புகார் வந்தால் உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் கைது செய்யப்படுவர். தனியார் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசே நேரடியாக வழங்குகிறது.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில், முதற்கட்டமாக திருச்சி மாநகரில் சாலையோரங்களில் மின் கம்பிகள் இல்லாத பகுதிகளில் 25,000 மரக்கன்றுகள் நடும் பணி இன்று தொடங்குகிறது. மரக்கன்றுகள் நடுவதுடன் மட்டுமின்றி, அவை சமூக சேவை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு பராமரிக்கப்படவுள்ளன" என்றார்.

Also Read: ஜூன் இறுதிக்குள் 18+ பழங்குடிகள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் - நீலகிரியில் மா.சுப்பிரமணியன் பேட்டி