Tamilnadu

“பழமையான கோவில்களை ஆய்வு செய்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்” : அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

சென்னை மண்ணடி தம்புச்செட்டி தெருவில் உள்ள 100 ஆண்டுகளுக்குப் பழமையான இரட்டை விநாயகர் கோவிலின் முன்கூரை பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த திவாகரன் உயிரிழந்தார்.

சென்னை பிராட்வே பகுதியில், ஜெராக்ஸ் கடை நடத்தி வரும் திவாகரன், இன்று காலை கோவிலுக்கு வெளியில் நின்று வழிபட்டு கொண்டு இருந்த போது, முன்பகுதி இடிந்து அவர் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் விபத்து நடைபெற்ற இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினர் இறந்த திவாகரனின் உடலை இடிபாடுகளிலிருந்து மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அறிந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் விபத்து நடைபெற்ற கோவிலுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் பரம்பரை அறங்காவலர் நிர்வாகத்திற்கு உட்பட்ட இந்த கோவிலின் கட்டிட பராமரிப்பு பணிகளை உடனடியாக நாளையே தொடங்க கோவிலின் அறங்காவலரிடம் அமைச்சர் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, “தமிழகம் முழுவதும் உள்ள பழமையான கோவில்களின் ஸ்திரத்தன்மை ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அதன் முடிவுகளின் அடிப்படையில் கோவில்களின் கட்டுமான பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும். மேலும், கோயில் இடிந்து விழுந்ததில் இறந்த பக்தருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து சென்னை செளகார்பேட்டை பகுதி மின்ட் தெருவில் தனியார் அறக்கட்டளைகள் சார்பில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பிராட்வே பகுதியில் பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கினார்.

Also Read: “மதுரையில் AIIMS பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்” : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!