Tamilnadu

“மாயமான மீனவர்களை சர்வதேச தேடுதல் குழு மூலம் மீட்க தமிழக அரசு நடவடிக்கை” : அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேர் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதியை சேர்ந்த 7 பேர் வட மாநிலத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 16 பேர் கடந்த 5 ஆம் தேதி கோழிக்கோட்டில் இருந்து கடலுக்கு விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை.

மாயமான மீனவர்கள், புயல் காரணமாக எங்கேனும் திசை மாறி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் குடும்பத்தினரால் கூறப்படும் நிலையில், அவர்களை கண்டுபிடிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மாயமான மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதோடு மாயமான மீனவர்களை தேட துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"மாயமான மீனவர்களை மீட்க மத்திய அரசு மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தமிழக முதல்வர் மு. ஸ்டாலின் தொடர்ந்து விசாரித்து வருகிறார்.

சர்வதேச எல்லையை கடந்து பிற நாடுகளில் இவர்கள் கரை சேர்ந்து இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்ததால் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு மத்திய அரசு மூலம் தகவல் அளித்து விசாரித்து சர்வதேச தேடுதல் குழு மூலம் தேட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மாயமாகும் மீனவர்கள் தேடுவதற்கான நடவடிக்கை தொடர்பாக நிரந்தர தீர்வு ஏற்படுவதற்கு தமிழக அரசு ஆலோசித்து வருகிறது" என தெரிவித்தார்.

Also Read: “கருணைக்கரம் நீட்டிய முதலமைச்சரின் செயல் உணர்ச்சிவயப்பட வைக்கிறது” : ‘தினத்தந்தி’ நாளேடு தலையங்கம்!