Tamilnadu

“மக்களாக நின்று மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்” : தினகரன் தலையங்கம் புகழாரம்!

மக்களோடு மக்களாக நின்று மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று ‘தினகரன்’ ஏடு தலையங்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளது.

‘தினகரன்’ நாளிதழில் வெளியான தலையங்கம் வருமாறு:-

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நாளில் இருந்தே அண்டை மாநிலங்கள் தமிழகத்தை உற்று நோக்க ஆரம்பித்து விட்டன. கொரோனா தடுப்பு பணிகளில் அவர் காட்ட தொடங்கிய வேகம், இந்தியாவிற்கே முன்மாதிரியாக அமைந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் துவங்கிய கொரோனா 2ம் அலை இந்தியாவையே உலுக்கியது. ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தலை எதிர்கொண்ட தமிழகமும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்தது. அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தது.

முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற போது, தமிழக சூழல் அவருக்கு சிவப்பு கம்பளம் விரிப்பதாக இல்லை. ஒருபக்கம் நிதி நெருக்கடியும், மறுபக்கம் கொரோனாவால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு ஆக்சிஜனுக்கு அலையும் பரிதாபம். ஆனால், இவற்றையெல்லாம் பொறுமையோடும், உத்வேகத்தோடும் அவர் எதிர்கொண்டார்.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்தை தொட்டபோது, முதல்வர் எடுத்த நடவடிக்கைகள் வேகத்தோடு, விவேகமும் நிறைந்ததாக இருந்தது. கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க மாவட்டத்திற்கு ஒரு அமைச்சரை நியமித்து, அதிகாரிகளையும் அவர் முடுக்கிவிட்டார். அரசு இயந்திரம் இதுநாள் வரை இல்லாத அளவுக்கு வேகமாக சுழன்றது.

மாவட்ட மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுத்ததோடு, கோவிட் சிறப்பு மையங்களில் நோயாளிகளுக்கு தேவையான வசதிகளையும் செய்து கொடுத்தார். தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும், அதை தொடர்ந்து தற்போதைய தளர்வுகள் அற்ற ஊரடங்கும் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன.

பொதுவாக ஊரடங்கு காலத்தில் போலீசாரின் ராஜ்யம் களைக்கட்டும். ஆனால், இம்முறை மக்களின் நண்பனாக போலீசார் பணியாற்றியதற்கு அரசின் அணுகுமுறையும் காரணமாகும். கடந்த கால ஊரடங்கில் இ.பாஸ் முறையில் அரசு அதிகாரிகளின் கையில் இருந்த கடிவாளம், இ.பதிவு முறையில் மக்களிடம் கைமாறியது.

தற்போது கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் 6 மாவட்டங்களிலும் முதல்வரே களம் இறங்கி அரசு இயந்திரத்தை முடுக்கி விட்டுள்ளார். கோவை இஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் கவச உடை (பி.பி.இ.கிட்) அணிந்து கொரோனா நோயாளிகளை நேரில் கண்டு நலம் விசாரித்தது, நோயாளிகள் மத்தியில் நம்பிக்கையை வரவழைக்கும்.

இந்த அரசும், முதல்வரும் நம்மோடு இருக்கின்றனர் என்ற எண்ணமே நோயாளிகள் கொரோனாவில் இருந்து விடுபட உதவும். தமிழகத்தில் கடந்த காலங்களில் போல் இல்லாமல் இப்போது முதல்வரே மக்களோடு மக்களாக நிற்கிறார். ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களிலும் தமிழக முதல்வர் கொரோனா தடுப்பு பணிகளை முன்னின்று செயல்படுத்துகிறார்.

தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளில் மார்க்கெட் வியாபாரிகள், வயல்வெளிகளில் விவசாயிகள், சாலைகளில் தொழிலாளர்கள் என பலதரப்பு மக்களையும் கலந்துரையாடி மக்களிடம் நன்மதிப்பை பெற்றவர் முதல்வர் ஸ்டாலின். தற்போது ஆட்சி பொறுப்பேற்ற பின்னரும் மக்களை சந்திப்பதில் எள்ளளவும் குறைவின்றி காணப்படும் அவரது செயல்பாடுகள், இந்திய அளவில் கவனத்தை ஈர்க்கிறது.

Also Read: “கொரோனா தொற்றை வெல்வோம் - நமக்கான வளம் மிகுந்த தமிழகத்தை அமைப்போம்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!