Tamilnadu

“தமிழகத்தில் இன்னும் 2 நாட்களுக்கு மட்டுமே தடுப்பூசி கையிருப்பு” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் இன்னும் 2 நாட்களுக்கு போதுமான அளவே கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை வர்த்தக மையத்தில் 500 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய 504 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மைய இரண்டாம் பிரிவினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.

அரசு பொது மருத்துவமனைகளிலிருந்து மருத்துவர்களின் பரிந்துரையின்படி அல்லது மாநகராட்சியின் முதற்கட்ட உடற்பரிசோதனை மையங்களில் உள்ள மருத்துவர்களின் பரிந்துரையின்படி மட்டுமே இங்கு தொற்று பாதித்த நபர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

சென்னை வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் 11 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 ஆக்சிஜன் சேமிப்பு கலன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆக்சிஜன் சேமிப்பு கலன்கள் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் சார்பில் நிறுவப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோவிட் 2வது அலையின் தாக்கம் ஓரளவு குறைந்து வரும் சூழலில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சில மாவட்டங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் சிகிச்சை மையத்தில் ஆய்வு செய்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் உள்ள மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் உற்சாகத்தை கொடுக்கும் வகையில் ஊக்கத்தொகை அளித்து மிகப்பெரிய அளவிலான மகிழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் ஏற்படுத்தி உள்ளார்.

நானும், சுகாதாரத்துறை செயலாளரும் போகிற இடங்களிலெல்லாம் மருத்துவர்களும், செவிலியர்களும் அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மட்டுமின்றி நோயாளிகளை மேலும் ஊக்கப்படுத்தவும், நம்பிக்கையை ஏற்படுத்தவும்தான் கோவையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு முதல்வர் சென்று நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.

தமிழகத்தில் கோவிட் தடுப்பூசிகள் இன்னும் 2 நாட்களுக்கு மட்டுமே போதுமான அளவிலேயே கையிருப்பில் உள்ளது. தமிழகத்திற்கு ஒன்றிய அரசு 25 லட்சம் தடுப்பூசிகள் தரவேண்டிய நிலையில் 13 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே தந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

Also Read: “வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்துதான் வேலைசெய்வேன்; தமிழகத்தை காப்பதே முதல்பணி” -முதல்வர் மு.க.ஸ்டாலின்