Tamilnadu
“போர்க்குணம் நிரம்பிய பெண்ணுரிமைப் போராளி” : மைதிலி சிவராமன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் !
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் மைதிலி சிவராமன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி பின்வருமாறு :-
“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவருமான திருமதி. மைதிலி சிவராமன் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அளிக்கிறது. அவருடைய மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண்ணுரிமைப் போராளியான அவர் - முதலில் நியூயார்க் பட்ஜெட் டிவிஷனிலும், பிறகு ஐ.நா. மன்றத்தில் உதவி ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக இருந்த மைதிலி சிவராமன், ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவராக இருந்து பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், உரிமைகளுக்காகவும் அயராது குரல் கொடுத்து ஒரு புரட்சிப் பெண்ணாகத் திகழ்ந்தவர்.
கீழ்வெண்மணி துயரத்தை, அந்த கிராமத்திற்கே நேரில் சென்று விசாரித்து - நீண்ட தொடர் கட்டுரை எழுதியவர். அவை “Hunted by Fire” என்ற புத்தகமாக வெளிவந்து - இன்றும் வரலாற்று ஆவணமாக இருக்கிறது. தருமபுரி மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கு நேர்ந்த கொடுமைகளைத்தட்டிக் கேட்கப் போராடி - அம்மக்களுக்கு நீதி கிடைத்திட இரவு பகலாக உழைத்தவர்.
பெண்களுக்கு எதிராக எங்கு அநீதி நடைபெற்றாலும் - அங்கே வெகுண்டெழும் ஆவேசக் குரலாக மைதிலி சிவராமன் அவர்களின் குரல்தான் இருக்கும்! போர்க்குணமும் - துணிச்சலும் நிரம்பிய ஒரு பெண்ணுரிமைப் போராளியை தமிழ்நாடும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பறிகொடுத்திருப்பது பேரிழப்பாகும்.
மைதிலி சிவராமன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும்- அவரோடு இணைந்து பணியாற்றிய மகளிருக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும் - அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“எத்தனை விருது கிடைத்தாலும், தமிழக அரசின் விருதுகளான ‘தாயின் முத்தத்திற்கு’ ஈடாகாது!” : உதயநிதி பேச்சு!
-
தமிழ்நாடு அரசின் 7 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள்! : முழு விவரம் உள்ளே!
-
“எடப்பாடி பழனிசாமியின் வாயை, நம் முதலமைச்சர் இன்றைக்குத் தைத்துவிட்டார்!” : அமைச்சர் ரகுபதி!
-
தமிழ்நாடு காவல்துறைக்கு ரூ.122.19 கோடியில் புதிய கட்டடங்கள்.. 360 புதிய வாகனங்கள்! : முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் ரூ.3,510 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம்! : MoU கையெழுத்தானது!