Tamilnadu

கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்து மக்களின் குறைகளைக் கேட்ட அமைச்சர்கள்... கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு!

தமிழகத்தில், கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. மக்களின் கோரிக்கைகளைப் பெறுவதற்கும், மருத்துவ ஆலோசனைகள் வழங்குவதற்கும் கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு மண்டலக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொலைபேசி வாயிலாக சுமார் 5.80 லட்சம் அழைப்புகளின் மூலம் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இதேபோல, கோவை மாநகராட்சி சார்பாகவும் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகளின் மூலமாக தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய உதவிகளைப் பெற்று வருகின்றனர்.

தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர், கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள கோவையில் முகாமிட்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

அதன்படி, கோவை மாநகராட்சி அலுவலகத்துக்கு இன்று சென்ற அமைச்சர்கள், மாநகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது கட்டுப்பாட்டு அறைக்கு அலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு, தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் வசிக்கும் பொதுமக்களிடம் நேரடியாகப் பேசினர். இதில், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் வசிக்கும் பொதுமக்களின் தேவைகள், அவர்களது பகுதிகளில் மேற்கொள்ளப்படும் தடுப்புப் பணிகள், குறித்துக் கேட்டறிந்தனர்.

அப்போது, தொடர்புகொண்ட நபர் ஒருவர், தனது குடும்பத்தினருக்கு உணவளித்து உதவுமாறு கோரிக்கை விடுத்தார். அவரது முகவரியைக் கேட்டறிந்த அமைச்சர் அர.சக்கரபாணி, இரு வேளை உணவு கேட்ட அவரது வீட்டுக்கு 3 வேளையும் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் தொடர்புடைய நபரின் வீட்டுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுத்தனர்.

Also Read: “கரூர் மாவட்டத்தில் யாருக்கு உணவு தேவைப்பட்டாலும் இந்த எண்களுக்கு அழையுங்கள்” : அமைச்சர் செந்தில்பாலாஜி