Tamilnadu
கருப்பு பூஞ்சை நோய் எவ்வாறு உருவாகிறது என்பதை கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழகத்தில் பரவி வரும் இரண்டாம் கட்ட கொரோனா அலையை கட்டுப்படுத்த அரசு, கொரோனா தடுப்பூசி மையங்களை ஏற்படுத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் இந்த பணிகளை அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன்படி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டியில், அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி முகாம் மேலும் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் மையம், கொரோனா கட்டுப்பாடு பகுதி, கர்ப்பிணி பெண்கள் பராமரிக்கும் மையம் போன்றவற்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று இரவு கொரோனா வைரஸ் தடுப்பு பணி நடவடிக்கைக் குறித்து அரசு அலுவலர்கள் மேற்கொண்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியன், “தமிழகத்திலேயே 1256 முன்கள பணியாளர்களுக்கு பேருக்கு பல்ஸ் ஆக்ஸி மீட்டர் இந்த மாவட்டத்தில்தான் முதன்முதலாக வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்திலேயே இயற்கை மருத்துவத்தின் மூலம் கொரோனா சிகிச்சை நிலையம் நிறுவப்பட்டு இருப்பதும் இந்த மாவட்டத்தில்தான்.
தென்காசி மற்றும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைகளில் தலா 5 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிசன் கிடங்குகள் நிறுவப்படும். தென்காசியில் விரைவில் மருத்துவ கல்லூரி அமைப்பதற்கான நடவடிக்கைகள் பரிசீலிக்கப்படும். ரெம்டெசிவீர் மருந்து பயன்படுத்துவது குறித்து இருவேறு கருத்துகள் இருக்கின்றன இருப்பினும் மக்கள் மனநிலையை அறிந்து என்ன தேவைப்படுகிறதோ அதை சுகாதாரத்துறை மூலம் முறையாக வழங்க இருக்கிறோம்.
உலகில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான தடுப்பூசியை கண்டுபிடித்து அது எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பதை கருத்தில்கொண்டு பயன்படுத்தி வருகிறார்கள். ரஷ்யாவின் ஸ்புட்னிக் மருந்தும் 97% நல்ல பலனை அளிப்பதாக சொல்கிறார்கள். அது மட்டுமல்லாது வேறு உலக அளவில் வேறு எந்த தடுப்பூசிகள் சிறந்த பலன் அளிக்கிறதோ எது உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்று இருக்கிறதோ அந்த தடுப்பூசி தயாரிக்கும் கம்பெனிகள் தமிழக அரசு கொடுத்துள்ள டெண்டரில் பங்கேற்கலாம் என்று அறிவித்து உள்ளோம் இது குறித்து வரும் 6-ஆம் தேதி இறுதியான முடிவு தெரியவரும்.
தமிழகத்தில் 286 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக மக்கள் பீதி அடையத் தேவையில்லை இந்த நோய் எப்படி உருவாகிறது இதற்கான சிகிச்சை முறைகள் என்ன என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள பத்துக்கும் மேற்பட்ட வல்லுநர்களைக் கொண்ட குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. இக்குழுவின் கூட்டம் நாளை நடக்க இருக்கிறது. பிரபலமான திறமையான மருத்துவர்கள் இந்த குழுவில் இடம்பெற்றிருக்கிறார்கள். இக்குழுவின் கூட்டத்தில் இது குறித்து ஆய்வு செய்து அதன்படி கருப்புப்பூஞ்சை நோயை முறையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்துள்ளார்
Also Read
-
235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள்... 4 நாட்களுக்கு... களைகட்டும் பெசன்ட் நகரில் உணவுத் திருவிழா!
-
இறந்த 4 மாதக் குழந்தையை 20 ரூ. பிளாஸ்டிக் பையில் கொண்டு சென்ற அவலம்.. ஜார்கண்ட் சோகத்தின் பின்னணி என்ன?
-
SIR மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்: “தமிழ்நாட்டை குறிவைத்துள்ள பாஜக” - திருமாவளவன் MP கண்டனம்!
-
மனித விலங்கு மோதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை.. அதிநவீன கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!
-
“ஈராயிரம் ஆண்டுகால சண்டை இது! இதில் நாம் தோல்வி அடைந்துவிட மாட்டோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!