Tamilnadu

“மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

கொரோனா நோய்த் தொற்றினைத் தடுக்கும் வகையில், முதல் ஒரு வார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி தமிழ்நாட்டில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளதன் அடிப்படையில், பொது மக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டுமென்று ஏற்கெனவே ஆணையிட்டிருந்தார்கள்.

அதன்தொடர்ச்சியாக, முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியப் பொருட்களை தங்கு தடையின்றி வழங்கப்படுவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று (25-5-2021) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

முதலமைச்சர் ஏற்கெனவே வழங்கியுள்ள அறிவுரையின்படி, தோட்டக்கலைத் துறை, வேளாண்மைத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை, சென்னை பெருமாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள், ஆவின் நிறுவனம் மற்றும் மின் வணிக நிறுவனங்கள் மூலமாக சென்னை மாநகராட்சி மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் மூலமாக காய்கறிகள், பழங்கள், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் பொது மக்களுக்கு எவ்விதத் தடையுமின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சென்னையைப் பொறுத்தவரை, 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் பொது மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கே நேரடியாக வாகனங்களில் சென்று வணிகர் சங்கத்தினரின் உதவியுடன் காய்கறிகள், பழங்கள் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, 24-5-2021 அன்று சென்னையில் 1,670 வாகனங்கள் மூலம் 1,400 மெட்ரிக் டன்னும், இதர மாவட்டங்களில் 4,626 வாகனங்கள் மூலம் 3,500 மெட்ரிக் டன்னும், ஆக மொத்தம் 6,296 வாகனங்கள் மூலம் 4,900 மெட்ரிக் டன் காய்கறிகளும், பழங்களும் விநியோகம் செய்யப்பட்டன.

இன்று நடைபெற்ற கூட்டத்தில், பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் தொடர்புடைய துறைகள் மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

இந்த சேவை நகர்ப்புறங்களில் சிறப்பாக வழங்கப்படுவதைப் போலவே, கிராமப்புறங்களிலும் வழங்கப்படுவதை கட்டாயம் உறுதி செய்யவேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள். மேலும், இன்று (25-5-2021), 13,096 வாகனங்கள் மூலம் சென்று 6,509 மெட்ரிக் டன் அளவிலான காய்கறிகளையும், பழங்களையும் விநியோகம் செய்ய அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொது மக்களின் வசதிக்காக, அடுத்து வரும் நாட்களுக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் போதுமான அளவில் தொடர்ந்து நியாயமான விலையில் கிடைத்திட, தொடர்புடைய துறைகள் நடவடிக்கை எடுக்குமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுரை வழங்கினார்கள்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், வேளாண்மை - உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் திரு. வெ.இறையன்பு, வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் வேளாண்மைத் துறை, டாக்டர் கே.கோபால், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Also Read: “தமிழகம் முழுவதும் ஒரேநாளில் 4900 டன் காய்கறிகள் விற்பனை” அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் தகவல்!