Tamilnadu

“புதிய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 4,000 வழங்கப்படும்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதில் தி.மு.க மட்டும் 133 இடங்களைப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்ததையடுத்து, முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார்.

முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இதையடுத்து தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன், கொரோனா நிதி திட்டத்திற்கு எனது முதல் கையெழுத்திட்டு துவக்கிவைத்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதிய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு, நோய்ப் பரவலைத் தடுக்கும் பொருட்டு, தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொரோனா நோய் தொற்றின் காரணமாகப் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களைக் குறைக்கும் வகையிலும், பெருந்தொற்று நேரத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும் ரூ.4153.39 கோடி செலவில், மே மாதத்தில் 2,07,66,950 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2 ஆயிரம் நிவாரணத் தொகையினை முதல் தவணையாக வழங்க ஏற்கனவே முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தற்போது நடைமுறைக்கு வந்துள்ள, 2,14,950 புதிய அரிசி குடும்ப அட்டை பெற்றுள்ள குடும்ப அட்டைதாரர்களின் வாழ்வாதாரத்திற்கும் மேற்கூறிய உதவியை வழங்கிடும் வகையில், ரூ,42.99 கோடி செலவில் ரூ.2 ஆயிரம் நிவாரணத் தொகை முதல் தவணையாக வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “ஆக்சிஜன், தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் தமிழ்நாட்டிலேயே உற்பத்தி” : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!