Tamilnadu

தடுப்பூசியிலும் தமிழ்நாட்டிற்கு பாரபட்சம்... பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் அள்ளிக்கொடுக்கும் மோடி!

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே அதிக தடுப்பூசிகளை ஒதுக்குவதாக குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.

குஜராத் போன்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளில் பாதியளவு கூட மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கிய தடுப்பூசிகள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி 7.6 கோடி மக்கட்தொகை கொண்ட தமிழ்நாட்டிற்கு 72 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இதே அளவு மக்கள் தொகை கொண்ட ராஜஸ்தானுக்கு 1.4 கோடியும், 6.9 கோடி மக்கட்தொகை கொண்ட குஜராத் மாநிலத்திற்கு 1.39 கோடி தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன. குஜராத்தை விட குறைவாக 6.6 கோடி மக்கட்தொகை கொண்ட கர்நாடகாவுக்கு 1.6 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் இந்த பாரபட்ச நடவடிக்கை மிக மோசமான செயல் என்றும், ஆக்சிஜன் சிலிண்டர் முதல் மருந்துகள் வரை மத்திய அரசிடம் போராட வேண்டியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டிற்கு இதுவரை வழங்கப்பட்ட 72 லட்சம் தடுப்பூசிகளில், 66 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read: “தற்போதைய தடுப்பூசி விலை நியாமானதுதான்” : உச்ச நீதிமன்றத்தில் அதிர்ச்சிகரமான வாதத்தை முன்வைத்த மோடி அரசு!