Tamilnadu

பதவியேற்பு நிகழ்வில் கட்சி பாகுபாடின்றி நடந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... குவியும் பாராட்டு!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. கடந்த 7-ம் தேதி முதல்வராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும் அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றனர். சட்டப்பேரவை முன்னவராக அமைச்சர் துரைமுருகன், தமிழக அரசு கொறடாவாக திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் கோவி.செழியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பதிவியேற்பு நிகழ்வு இன்று நடைபெற்றது. அதன்படி, தமிழகத்தில் 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம், சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டத்தில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவை தற்காலிக தலைவர் கு.பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைத்து வைத்தார்.

அப்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவையில், “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..” எனக் கூறி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து தி.மு.க அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ‘உளமார’ எனக் கூறி பதவி ஏற்றுக்கொண்டனர்.

தி.மு.க இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் உளமார உறுதி கூறுகிறேன் எனக் கூறி பதவி ஏற்றுக்கொண்டார். தி.மு.கவைச் சேர்ந்த 6 உறுப்பினர்களும், அ.தி.மு.கவைச் சேர்ந்த 4 உறுப்பினர்களும் இன்று பதவியேற்க வரவில்லை. அவர்கள் 10 பேரும் 12ம் தேதி சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்றுகொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னதாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பதவி பிரமாணம் செய்து கொண்ட பின்பு கட்சி பாகுபாடின்றி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் எழுந்து நின்று நன்றி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் பதவியேற்பு நிகழ்ச்சியின் போது கட்சி பாகுபாடின்றி நடந்துகொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Also Read: “என்ன நெருக்கடி இருந்தாலும் அரசின் கவனத்திற்கு கொண்டுவாருங்கள்” : MLAக்களுக்கு முதல்வர் அன்பு வேண்டுகோள்!