Tamilnadu

“வாட்ஸ்அப்பில் தகவல் சொன்னால் உங்கள் வீட்டுக்கே மருந்து வரும்” : கொரோனா நோயாளிகளுக்காக புது முயற்சி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. தற்போது தொற்று எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

மேலும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகளையும், சித்த மருத்துவ வசதிக்கும் தமிழக அரசு விரைவாக ஏற்பாடு செய்து வருகிறது.

தற்போது, தமிழகத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறனர். இவர்களுக்கு மருந்துகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், வாட்ஸ் ஆப் வசதியைப் பயன்படுத்தி மருந்து கேட்கும் கொரோனா நோயாளிகளுக்கு வீட்டிற்கே சென்று மருந்து வழங்கும் வகையில் புதிய முயற்யை தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், "மாநிலம் முழுவதும் சுமார் 40,000 மொத்த மருந்து விற்பனையாளர்கள் இணைந்து, வாட்ஸ்அப் மூலம் மருந்து விநியோகிக்கும் சேவையைத் தொடங்கியுள்ளனர். மருந்து தேவை, மருத்துவத் தேவை உள்ளவர்கள் 93420 66888 என்ற எண்ணுக்கு தங்கள் தேவையை, முகவரியுடன் கூறினால், அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் வீடு தேடி மருந்துகள் கிடைக்கும் வகையில் புதிய முயற்சியில் தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர் சங்கம் ஈடுபட்டுள்ளது.

மேலும் 50 சதவீதம் தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படும். மருத்துவர்களின் ஆலோசனை தேவைப்படுவோருக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலம் செல்போனில் ஆலோசனை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: ஒரே மருத்துவமனையில் 80 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று... டெல்லியில் தொடரும் சோகம்!