Tamilnadu
“கொரோனா நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சையை உறுதி செய்க” - அமைச்சரவை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கி, 6 முக்கிய முடிவுகளை எடுத்துரைத்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் இன்று (9-5-2021) நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
1. நமது மாநிலத்தில் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நமது அரசு நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்திட உள்ளது. இந்த ஊரடங்கு சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டால் மட்டுமே, தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தி, இறப்புக்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும். எனவே, மாண்புமிகு அமைச்சர்கள் அனைவரும் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டங்களில் இந்த ஊரடங்கு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.
2. மாவட்டங்களில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் அங்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும். இந்த மருத்துவமனைகளில் உள்ள வசதிகளையும் அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகளுக்கு தேவையான தரமான உணவு போன்ற வசதிகளை மேம்படுத்திட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.
3. தமிழகத்தில் தற்போது பல நெருக்கடிகளுக்கிடையே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த ஆக்ஸிஜன் முறையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்திடவும், எந்தவிதமான சூழலிலும் ஆக்ஸிஜன் வீண் போகக் கூடாது என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
4. சென்னை மட்டுமின்றி, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற இடங்களிலும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்து அரசால் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனையை கண்காணிப்பதோடு, இத்தகைய மருந்துகள் கள்ளச்சந்தையில், விற்பனையாவதைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
5. தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் தடுப்பூசி போடப்படுவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசிப் பயன்பாட்டை உயர்த்துவற்கு, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி முனைப்பாக செயல்பட வேண்டும்.
6. மருத்துவத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து செயல்பட்டால் மட்டுமே மேற்கூறிய நடவடிக்கைகளில் வெற்றி பெற இயலும். எனவே மாண்புமிகு அமைச்சர்கள் அனைவரும் இத்துறைகளை ஒருங்கிணைத்து ஆய்வு கூட்டங்களை நடத்தி, அனைவரும் இணைந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!