Tamilnadu
புதிய விடியல் வராதா என நம்பும் மக்களுக்கு நல்ல விடையைக் காணும் நல்ல நாளாகட்டும் -கி.வீரமணி மேதின வாழ்த்து
புதிய அரசு - ஆட்சியில் ‘புதிய விடியல் வராதா’ என்று நம்பும் மக்களுக்கு நல்ல விடையைக் காணும் ‘நல்ல நாளாகட்டும்‘ மே தின நாள் கூறியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
இது தொடர்பான அவரது அறிக்கையில், “நாளை (1.5.2021) மே முதல் நாள்; மேதினியெங்கும் மே தின நாள்!
உழைப்பாளர் உரிமை பெற்ற வரலாற்றை உழைக்கும் வர்க்கமாம் தொழிலாளத் தோழர்கள் கொண்டாடி மகிழும் பெருநாள் - திருநாள்!
நம் நாட்டில் தொழிலாளர்கள் என்றால் வர்க்கத்தைவிட வருணத்தையே மய்யப்படுத்தி, குலத்தொழிலால் கொத்தடிமைகளாக காலங்காலமாய் வாழ்ந்த மக்களுக்கு சமூக விடுதலையும், மனித சமத்துவமும் தேவை என்று முழங்கி, இயக்கங் கண்ட தந்தை பெரியார் ‘‘தொழிலாளியை பங்காளியாக்கி, உரிமையில் பங்குபெறும் சம ஈவினை உண்டாக்குக’’ என்று தாம் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் மூலம் புதியதோர் உலகு காண வழி வகுத்தவர். இன்றும் உண்மையான திராவிடர் இயக்கம் அந்த சுயமரியாதைச் சூரியக் கதிரொளியாக தொழிலாளர் பிரச்சினை முதல் அனைத்திலும் செயல்படுகிறது!
கரோனா காலத்தில் மேலும் தொழிலாளர்கள் - புலம் பெயர்ந்தோர் உட்பட ‘‘காணத் தகுந்தது வறுமையே, அவர்கள் பூணத் தெரிந்தது பொறுமையே’’ என்று வறுமையாலும், தொற்று நோய் அச்சத்தினாலும் அலைக்கழிக்கப்படும் அவதியில் அல்லல்பட்டு ஆற்றாது அழுகின்ற கண்ணீர் விடும் நிலை மாறவேண்டும். புதிய அரசு - ஆட்சியில் ‘‘புதிய விடியல் வராதா’’ என்று நம்பும் மக்களுக்கு நல்ல விடையைக் காணும் ‘நல்ல நாளாகட்டும்‘ மே தின நாள்!
சோவியத் ரஷ்யாவின் 1932 மே நாள் கொண்டாட்டத்தில் நேரில் விருந்தினராகக் கலந்துகொண்ட தந்தை பெரியாரை முன்னிலைப்படுத்திய வரலாற்றின் உள் அடக்கம் நமது மே தின நாள் - அனைவருக்கும் மே தின நாள் வாழ்த்துகள்!
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!