Tamilnadu
“அனைத்துக்கட்சி கோரிக்கையை, அழுத்தமாக உச்சநீதிமன்றத்தில் பதிவுசெய்யத் தவறிய அ.தி.மு.க அரசு” - வைகோ சாடல்!
கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் தீவிரமடைந்து வரும் நிலையில், கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க ஸ்டெர்லைட் ஆலையில் தமிழ்நாட்டுக்குத் தேவையான ஆக்சிஜன் தயாரிக்க நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆனால், இன்று உச்சநீதிமன்றத்தில், ஆக்சிஜன் ஆக்கும் முழு உரிமையும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கே கொடுக்கப்பட்டுள்ளதோடு, அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட விஷயங்கள் மீறப்பட்டுள்ளன.
இந்நிலையில், இதுகுறித்து ம.தி.மு.க பொதுச் செயலாளரும், எம்.பியுமான வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வைகோ விடுத்துள்ள அறிக்கையில், “தூத்துக்குடி நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து, 1996 இல் இருந்து போராடி வருகின்றேன். தொடர்ந்து உண்ணாவிரதங்கள், நடைபயணங்கள், மறியல், முற்றுகை என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டங்கள் நடத்திய அளவிற்கு, தமிழ்நாட்டில் வேறு யாரும் நடத்தியது கிடையாது.
பின்னர், சென்னை உயர்நீதிமன்றத்தில் 1997 இல் ரிட் மனு தாக்கல் செய்தேன். அதில் நானே வாதாடினேன். 2010 செப்டெம்பர் 28 ஆம் தேதியன்று, ஆலையை மூடுமாறு தீர்ப்பு கிடைத்தது. அதன்பிறகு, உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் தடை ஆணை பெற்றது. 2013 ஏப்ரல் 2 ஆம் தேதியன்று, ஸ்டெர்லைட் ஆலையை இயக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தது. அதன்பிறகு, நான் தீர்ப்பாயத்திற்குச் சென்று வழக்குத் தொடுத்தேன். மீண்டும இன்னொரு ரிட் மனு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன்.
அந்த ரிட் மனு, இன்னமும் நிலுவையில் இருக்கின்றது. .இதற்கு இடையில் நடைபெற்ற போராட்டத்தில்தான் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். தமிழ்நாடு அரசு, முழுக்க முழுக்க ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஏஜெண்டாகவே வேலை செய்து வந்துள்ளது.
தற்போது, நாட்டில் ஆக்சிஜன் தேவை என்ற பெயரில், ஸ்டெர்லைட்டை இயக்குவதற்கு வேதாந்தா நிறுவனம் முயற்சிக்கின்றது.
தமிழ்நாட்டுக்குத் தேவையான ஆக்சிஜனை மட்டும்தான் ஆக்க வேண்டும்; அதைப் பகிர்ந்து வழங்குகின்ற அதிகாரமும் தமிழ்நாட்டுக்குத்தான் வேண்டும் என, நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆனால், இன்று உச்சநீதிமன்றத்தில், ஆக்சிஜன் ஆக்கும் முழு உரிமையும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கே கொடுக்கப்பட்டு விட்டது.
தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளின் கோரிக்கையை, அழுத்தமாக உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்ய தமிழக அரசு வேண்டும் என்றே தவறி விட்டது. மறைமுகமாக, குறுக்குவழியில், ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு, தமிழ்நாடு அரசு வழி செய்து விட்டது. இது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
வரலாற்றில் இதுவரையில் இல்லாதது... ஒரே நாளில் அரசுக்கு குவிந்த ரூ.274.41 கோடி வருவாய் : பின்னணி என்ன?
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!