Tamilnadu
தொழிற்சாலை கழிவுகளால் மாசடையும் தமிழக நதிகள்: நிபுணர் குழு அமைத்து தடுத்திடுக - அரசுக்கு ஐகோர்ட் ஆணை!
தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகள் மூலம் நதிகள் மாசடைவதை தடுப்பது குறித்து ஆலோசனைகள் வழங்க நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நதியின் துணை நதிகளில் ஒன்றான அமராவதி நதி, அருகில் உள்ள தொழிற்சாலைகளால் மாசடைவதாக கூறி, தனசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், தொழிற்சாலைகளால் மாசடைந்த அமராவதி நதி நீர், குடிநீராகவோ, விவசாயத்துக்கோ பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும், நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, நதிகள் மாசடைவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை என தெரிவித்தது.
Also Read: வட மாநிலங்களைத் தொடர்ந்து தமிழகத்திலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை : கொரோனா நோயாளிகள் 7 பேர் உயிரிழப்பு!
மேலும், நதிகளில் தொழிற்சாலைகள், கழிவுகள் கொட்டுவது, கழிவுநீர் வெளியேற்றுவதை தடுப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், கடைமடை மக்களும் நதி நீரைப்பயன்படுத்தும் வகையில், அதன் தரத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
நதி நீர் மாசடையும் போது, நிலத்தடி நீரும் பயன்படுத்த தகுதியற்றதாகி விடுவதாக குறிப்பிட்ட நீதிபதிகள், நீரின் தரத்தை பாதுகாப்பதில் அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளக் கூடாது எனவும் அறிவுறுத்தினர்.
கூவம் நதி மீது கட்டப்பட்டுள்ள நேப்பியர் பாலத்தின் மீது ஏசி காரில் செல்லும்போது கூட, துர்நாற்றம் வீசுவதாகவும் தலைமை நீதிபதி வேதனை தெரிவித்தார். தமிழகம் முழுவதும் உள்ள நதிகளில் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை இடமாற்றம் செய்வது குறித்தும், கழிவுநீர் வெளியேற்றுவதை எப்படி தடுப்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்குவதற்காக நிபுணர் குழுவை அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.
Also Read
-
வக்ஃபு சட்டத்தின் முக்கிய பிரிவுகளுக்கு தடை... "மக்கள் நம்பிக்கையை வலுப்படுத்தும்"- முதலமைச்சர் வரவேற்பு!
-
வக்ஃபு சட்டத்தின் முக்கிய பிரிவுகளுக்கு உச்சநீதிமன்றம் தடை... இஸ்லாமிய அமைப்புகள் வரவேற்பு !
-
“பாஜகவிடம் அடிமையாக அதிமுக இருப்பதற்கான காரணம் இதுதான்...” - தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி. பேச்சு!
-
பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைக்கும் ‘அன்புக்கரங்கள்’ திட்டம் - புதிய திட்டத்தின் சிறப்பு என்ன?
-
“இது என்ன, வாக்கரசியலுக்காக செய்வதா?” : ‘அன்புக்கரங்கள்’ திட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் பதிலடி!