Tamilnadu

“கொரோனா தீவிரத்தன்மை குறையும் வரை காவலர் தேர்வினை ஒத்திவைக்க வேண்டும்” : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

"தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பாக நடைபெறவுள்ள தேர்வினை கொரோனா இரண்டாம் அலையின் தீவிரத்தன்மை குறையும் வரை ஒத்திவைக்க வேண்டும்" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (TNUSRB) சார்பாக, இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்புத்துறை காவலர் என மொத்தம் 10906 காலிப் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு வரும் 21-04-2021 முதல் ஒரு வார காலத்திற்கு தமிழகம் முழுவதும், நடத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது.

கொரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமடைந்துள்ள நிலையில் இத்தேர்வினை நடத்துவது என்பது கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கவே அதிக வாய்ப்பினை உருவாக்கும். திருவிழாக்கள், திருமணங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், இத்தேர்வினை ஒத்திவைப்பதே சரியான முடிவாக இருக்கும்.

எனவே இந்த உடற்தகுதி தேர்வினை, இரண்டாம் அலையின் தீவிரத்தன்மை குறையும் வரை ஒத்திவைக்க வேண்டும் எனத் தமிழக அரசையும், தேர்தல் ஆணையத்தையும் கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: சமூக நலத் திட்டங்களுக்கான 'Champions of Change Award 2020’ விருது பெற்றார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!