Tamilnadu

ரஃபேல் விமான ஊழல் - மோடிக்கு எதிரான வழக்கு 2 வாரத்தில் விசாரணைக்குப் பட்டியலிடப்படும் : உச்சநீதிமன்றம்

ரபேல் (Rafale) போர் விமான ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக, இந்தியாவைச் சேர்ந்த இடைத்தரகருக்கு பிரான்ஸ் நாட்டின் ‘டஸ்ஸால்ட் ஏவியேஷன்’ (Dassault Aviation) நிறுவனம் ரூ. 8 கோடியே 62 லட்சம் பணம் வழங்கியது சமீபத்தில் அம்பலமானது. டஸ்ஸால்ட் நிறுவன கணக்குகளை ஆய்வு செய்த பிரான்ஸ் ஊழல் தடுப்புப் பிரிவினர் (Agence Francaise Anticorruption - AFA)இந்த உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.

2012-ல் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசானது, ரூ.41 ஆயிரத்து 212 கோடிக்கு 126 ரபேல் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால், தான் ஆட்சிக்கு வந்ததும், 2016-ல் அந்த ஒப்பந்தத்தையே ரத்து செய்த பிரதமர் மோடி, புதிதாக ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார்.

வெறும் 36 விமானங்களுக்கு ரூ. 58 ஆயிரம் கோடி தருவதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால், மன்மோகன் சிங் அரசு, 126 ரபேல் விமானங்களுக்கு பேசிய தொகையே வெறும் 41 ஆயிரம் கோடி ரூபாய்தான். அதாவது, காங்கிரஸ் அரசு ஒரு விமானத்தை ரூ. 350 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்த நிலையில், நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசோ, ஒரு விமானத்திற்கு ரூ. 1,670 கோடி கொடுக்கத் தயாரானது.

அதேபோல ‘டஸ்ஸால்ட்’ நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாக இருந்த, பொதுத்துறையைச் சேர்ந்த இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தை வெளியேற்றி விட்டு, அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ நிறுவனத்தைச் சேர்த்துக் கொண்டது.

இவை அனைத்திலும் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனினும் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்த ஊழல்களை வெகுசாமர்த்தியமாக மோடி அரசு அமுக்கி விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார்.

அந்த வழக்கில், பிரான்சிடமிருந்து 36 ரபேல் விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக பிரான்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார். இந்த ஊழல் விவகாரம் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

கோப்புப்படம்

மேலும், பிரதமர் மோடியை முதல் எதிர்வாதியாகவும், மத்திய அரசை இரண்டாவது எதிர்வாதியாகவும் சேர்த்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், இரண்டு வாரத்தில் வழக்கை விசாரணைக்குப் பட்டியலிடுவதாகக் கூறி வழக்கை ஒத்திவைத்தனர். புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா வரும் 24ம் தேதி பொறுப்பேற்ற பிறகு வழக்கு விசாரணக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: “கொரோனா கொள்ளைக்கு இடையிலும் 9.45 லட்சம் கோடி வரி வசூல்” : சொந்த நாட்டு மக்களை அவதியுறச் செய்த மோடி அரசு!