Tamilnadu

“அபராதம் விதித்தால் கொரோனா குறைந்துவிடுமா?” : போலிஸாரின் வசூல் வேட்டையால் கொந்தளிக்கும் வாகன ஓட்டிகள்!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

மேலும் சென்னையில் முகக்கவசம் அணியவில்லை என்றால் ரூபாய் 200 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையம் பிரகாஷ் அறிவித்துள்ளார். இதுபோன்று மாவட்டங்களிலும் முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் காவல்நிலைய போலிஸார் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கும் வேட்டையைத் துவங்கியுள்ளனர். மேலும் இரவு நேரங்களில் காவல்நிலையம் அருகே சாலையில் தடுப்பை அமைத்து அந்த வழியாக வரும் கார்களை நிறுத்தி, அதில் முகக்கவசம் அணியாதவர்களிடம் தங்கள் இஷ்டம்போல் அபராதம் வசூலித்து வருகின்றனர்.

அதாவது, காரில் 2 பேர் இருந்தால் 200 ரூபாய் என்றும் 5 பேர் இருந்தால் 5 ஆயிரம் ரூபாய் என்று போலிஸார் வசூல் வேட்டையை நடத்துவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதேபோல் சென்னையிலும் போலிஸார் தங்களின் வசூல் வேட்டையைத் துவங்கியுள்ளனர்.

முகக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தாமல், அபராத கட்டணம் வசூலித்தால் மட்டும் கொரோனா தொற்று குறைந்துவிடுமா என்றும் அபராதம் வசூலிக்கும் போலிஸார் முகக்கவசம் கூட கொடுப்பதில்லை என வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Also Read: “கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக ரேபிஸ் தடுப்பூசியை செலுத்திய சுகாதார ஊழியர்கள்” : உ.பியில் நடந்த அவலம்!