Tamilnadu

“தமிழர்களை வஞ்சித்துவிட்டு வாக்கு கேட்டு வரலாமா?”-தமிழகம் வரும் மோடியை எதிர்த்து கறுப்புக்கொடி போராட்டம்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரத்திற்கான நாளை பிரதமர் நநேரத்திரமோடி தமிழகம் வருகிறார். மோடியின் வருகைக்கு கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்போவதாகத் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் கூறுகையில், “மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. இதற்கு அ.தி.மு.க அரசும் துணை நின்றது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், பா.ஜ.கவும், அ.தி.மு.கவும் ஆளுநரைக் கொண்டு எழுவர் விடுதலைக்கு முட்டுக்கட்டைபோடுகிறது. மேலும் விடுதலை செய்வதுபோன்ற நாடகமும் நடத்துகிறார்கள். அதேபோல், மூன்று வேளாண் கருப்புச் சட்டங்கள், புதிய மின்சார சட்டங்கள் போன்ற விவசாய விரோத சட்டங்களைக் கொண்டுவந்து விவசாயத்தையே பா.ஜ.க அரசு அழிக்கப்பார்க்கிறது.

மேலும், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட நாசகார திட்டங்களை தமிழகத்தில் கொண்டு வருகிறது. இப்படி தொடர்ந்து தமிழக மக்களின் உரிமையை மத்திய பா.ஜ.க அரசு பறித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், தனது சுயநலத்திற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பா.ஜ.கவுக்கு சேவை செய்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல், தமிழகத்தை அழிக்கும் திட்டங்களுக்கு அனுமதி அளித்துவிட்டு, தற்போது தேர்தல் அறிக்கையில் இந்த திட்டங்களை எதிர்ப்பதாக மக்களை ஏமாற்றும் வகையில் எடப்பாடி செயல்பட்டு வருகிறார். இப்படி தமிழக மக்களுக்குத் துரோகம் செய்து வரும் எடப்பாடி பழனிசாமி அரசையும், தமிழகம் வரும் பிரதமர் மோடியையும் கண்டித்து தாராபுரத்தில் கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்த இருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “சிறுபான்மையின பாதுகாவலர் போல் நாடகம் நடத்தும் பழனிசாமியை மக்கள் நம்புவார்களா?” - மு.க.ஸ்டாலின் பேச்சு!