Tamilnadu

மோடி அரசுக்கு தலையாட்டி பொம்மைகளாக இருக்கும் அ.தி.மு.க அரசை தூக்கி எறிய வேண்டும்: பிருந்தா காரத் பேச்சு!

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதுரையில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனார்.

பின்னர், திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எஸ்.பொன்னுத்தாயை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பிருந்தா காரத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு, மக்கள் ஒற்றுமையைப் பாதுகாப்பதற்கான தேர்தல். கொள்கை மாற்றத்திற்கான தேர்தல். தமிழகத்தின் வெற்றி இந்திய அரசியலில் எதிரொலிக்கும்.

இங்கு அளிக்கப்படும் தீர்ப்பு மக்கள் விரோத - தொழிலாளர் விரோத கொள்கைகளை அமல்படுத்தி வரும் மத்திய அரசுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் யார்? அவர் மதுரை வடக்குத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். இப்போது ஏன் இங்கு நிற்கிறார்? வடக்குத் தொகுதியில் ஊழல் செய்து விட்டு, அங்கு சுருட்டிய பணத்துடன் இங்கு வந்துள்ளார்.

இந்தியில் “சோர்” என்றொரு வார்த்தை உள்ளது. அதற்குத் தமிழில் திருட்டு என்று அர்த்தம். அ.தி.மு.க கட்சி, இங்கு போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் இராஜன் செல்லப்பா உள்ளிட்ட அனைவரும் கொள்ளைக் கூட்டம். இவர்கள் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும்.

மத்தியில் ஒரு குரூரமான ஆட்சி நடைபெறுகிறது. மத்திய பா.ஜ.க அரசு அரசு உழைப்பாளி மக்களின் சட்டைப்பையில் உள்ள பணத்தை பிக்பாக்கெட் அடிக்கிறது. மத்தியில் நடைபெறும் பிக்பாக்ட் அரசுக்கு இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவரும் தலையாட்டி பொம்மைகளாக இருக்கின்றனர். கடந்த ஐந்தாண்டுகளாக வெட்கரமான ஆட்சியை அடிமைச் சேவகம் புரியும் அரசைத் தான் தமிழகம் கண்டுள்ளது.

மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிராக தி.மு.க, இடதுசாரிக் கட்சிகள் நாடாளுமன்றத்தில் குரல்கொடுக்கின்றன. எனவே, தி.மு.க தலைமையிலான அணியும் வெற்றி பெறவேண்டும். அனைத்து தொகுதிகளிலும் அவர்களுக்கு உங்களது வாக்குகளை அளியுங்கள். அ.தி.மு.க -பா.ஜ.க அணி தோற்கடிக்கப்பட வேண்டுமென உறுதியேற்றுக் கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.

Also Read: “எந்த பொத்தானை அழுத்தினாலும் பாஜகவுக்கு வாக்குகள் பதிவாகிறது”: மே.வங்கத்தில் மோடி அரசு நடத்திய குளறுபடி !