Tamilnadu

“கடல் வளங்களைப் பயன்படுத்த நீலப் பொருளாதாரக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளதா?” : டி.ஆர்.பாலு MP கேள்வி !

திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளரும், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, மக்களவையில், கடல் வளங்களைப் பயன்படுத்த நீலப் பொருளாதாரக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் அவர்களிடம், கடல் வளங்களைப் பயன்படுத்த, மத்திய அரசால், நீலப் பொருளாதாரக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளதா? என்றும், வரைவுப் பொருளாதாரக் கொள்கையில், பொது மக்களின் ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளதா? என்றும், நாட்டின் மொத்த உற்பத்தி பெருக்கத்தில், நீலப் பொருளாதாரத்தின் பங்களிப்பு, எந்த அளவாக இருக்கும்? என்றும், மக்களவையில், டி.ஆர்.பாலு, விரிவான கேள்வியை, எழுப்பினார்.

அதற்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை அமைச்சர், அவர்கள், மக்களவையில், அளித்த பதில் பின் வருமாறு : - இந்திய கடல் பகுதிகளில், நீடித்த வளர்ச்சியை உறுதிபடுத்தும் வகையில், கடல் வாழ் உயிரினங்கள், சுற்றுலா மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளை உள்ளடக்கிய, வரைவு நீலப் பொருளாதாரக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது என்றும்,

மீன் பிடித்தல், மீன் பதனிடுதல், கடல் சார்ந்த வர்த்தகம், மீன்பிடி துறைமுகங்களை கட்டமைத்தல், கடலுக்கடியில் கச்சா எண்ணெய் ஆராய்ச்சி மற்றும் நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான பரிந்துரைகளை, இந்த பொருளாதாரக் கொள்கை உறுதி செய்யும் என்றும் இந்தியாவின் மொத்த உற்பத்தி பெருக்கத்தில், நீலப் பொருளாதாரத்தின் பங்களிப்பு, சுமார் நான்கு விழுக்காடு அளவிற்கு இருக்கும் என்றும், மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை அமைச்சர், ஹர்ஷ் வர்த்தன் மக்களவையில், திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர், டி. ஆர்.பாலு விரிவான பதிலை அளித்துள்ளார்.

Also Read: “ஐ.ஐ.டி-யில் தேர்ச்சி பெற்றும் இடம் கிடைக்காத மாணவர்களின் கதி என்ன?” : மோடி அரசுக்கு தி.மு.க MP கேள்வி !