Tamilnadu
“ஆளை மாற்றாவிட்டால் தோல்வி உறுதி” - தொண்டர்களின் கொதிப்பால் பிரச்சாரத்தையே துவங்காத அ.தி.மு.க வேட்பாளர்!
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பிரதான கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க வேட்பாளர்களை அறிவித்தும், தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு, தீவிரமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியின் வேட்பாளராகத் தூசி கே.மோகனை அ.தி.மு.க தலைமை அறிவித்தது. அப்போதிலிருந்தே இவரை மாற்றக்கோரி, அத்தொகுதி அ.தி.மு.க தொண்டர்கள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தற்போது, அ.தி.மு.க தொண்டர்களின் மனக் குமுறல் என்ற தலைப்பில் தொகுதி முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டி தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அந்த சுவரொட்டியில், "வேட்பாளர் தேர்வில் தலைமை மீது எதிர்ப்பு, தூசி கே.மோகனைத் தவிர வேறு வேட்பாளரை அறிவித்தால் வெற்றி நிச்சயம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சுவரொட்டி தொகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதால், வேட்பு மனு தாக்கல் செய்த பிறகும், தொண்டர்களிடம் எதிர்ப்பு வலுத்து வருவதால் தூசி.கே.மோகன் பிரச்சாரம் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்.
அதேபோல், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டப்பேரவை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தங்கவேலை மாற்ற வேண்டும் என கோரி அ.தி.மு.க தொண்டர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று ஆலங்குடி தொகுதிக்கு தேர்தல் பரப்புரைக்கு வந்த எடப்பாடி பழனிசாமி செல்லும் வழியில் அ.தி.மு.கவை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வரிசையாகக் கூடி நின்று வேட்பாளரை மாற்ற வேண்டும் என முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் எடப்பாடி பழனிசாமியின் அருகே செல்லவிடாமல், தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த காமராஜ் என்பவர் தான் கட்டியிருந்த அ.தி.மு.க வேட்டியை அவிழ்த்து, தீயிட்டுக் கொளுத்தியதால் அங்கு பதற்றம் நிலவியது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!