Tamilnadu

"அவரா இங்கு உழைத்தார்?" : கூட்டணி கட்சிக்கு எதிராக அ.தி.மு.க தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட தொண்டர்கள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடுவோர் தொடர்பான 177 வேட்பாளர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இந்த வேட்பாளர் பட்டியலில், இரண்டே இரண்டு முஸ்லிம்களுக்கும், 14 பெண் வேட்பாளர்களுக்கும் மட்டுமே கண்துடைப்புக்காக வாய்ப்பளித்து அதிருப்தி அடையச் செய்ததை போன்று, கட்சிக்காக பணியாற்றுவோரையும் புறக்கணித்துவிட்டதாக எடப்பாடி - ஓ.பி.எஸ் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மேலும், வேட்பாளர் பட்டியல் வெளியிட்டதுமே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அ.தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பூந்தமல்லி, அரியலூர், பல்லடம், ஆலங்குளம், செய்யூர், சிவகங்கை என பல இடங்களில் எடப்பாடி, ஓ.பி.எஸ்-சை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுபோக, அ.தி.மு.கவினர் கேட்ட தொகுதிகளை பா.ஜ.கவுக்கும், பா.ம.கவுக்கும் கொடுத்ததால் அ.தி.மு.க நிர்வாகிகள் பெரிதும் அதிருப்தியடைந்துள்ளனர்.

இந்நிலையில், எழும்பூர் (தனி) தொகுதியை மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு அ.தி.மு.க தலைமை அறிவித்தது. அ.தி.மு.க தலைமையின் இந்த அறிவிப்பை எதிர்த்து தொண்டர்கள் பலர்ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அ.தி.மு.க தொண்டர்கள் கூறுகையில், ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எழும்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அ.தி.மு.கவுகாக இந்தத் தொகுதியில் நாங்கள் தான் உழைத்தோம். ஜான்பாண்டியன் ஒன்றும் இங்கு உழைக்கவில்லை. அவர் எங்கோ இருக்கிறார். அவரை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஜான்பாண்டியன் எங்களுக்கு வேண்டாம். கட்சியில் உண்மையான தொண்டர்களுக்கு மதிப்பில்லை” எனக் கொந்தளித்துள்ளனர்.

அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் அறிவித்ததிலிருந்தே தமிழகம் முழுவதும் சொந்த கட்சிக்காரர்களே போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறிவருகின்றனர்.

Also Read: “பா.ஜ.க, பா.ம.க சொல்லுக்கு ஆடும் அ.தி.மு.க தலைமை” : வேட்பாளர் அறிவிப்புக்கு எதிராக தொண்டர்கள் போர்க்கொடி!