Tamilnadu

“தலைவலி எனச் சென்ற பெண் ஊசி போட்டபிறகு பலி” : தவறான ஊசி செலுத்தியதாக மருத்துவர் மீது உறவினர்கள் புகார்!

சிவகங்கை மாவட்டம், மாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மனைவி செல்லப் பிரியா. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில்,பிப்ரவரி 3ம் தேதி செல்லப்பிரியாவுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. இதனால், மதகுபட்டியில் உள்ள தனியார் கிளினிக்கிற்கு சென்றுள்ளார். அங்கு அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் செந்தில்குமார், அவரை பரிசோதித்த பிறகு, இரண்டு நரம்பு ஊசிகள், இடுப்பில் ஒரு ஊசி என மூன்று ஊசிகள் போட்டுள்ளார்.

அப்போது, ஊசி போட்ட சில நிமிடங்களிலேயே செல்லப்பிரியா மயங்கி விழுந்ததை அடுத்து, அவரை சிவகங்கை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதனையடுத்து, மருத்துவர் செந்தில்குமார் அளித்த தவறான சிகிச்சையால் தான், செல்லப்பிரியா உயிரிழந்ததாகக் கூறி, அவரின் உறவினர்கள் மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதகுபட்டி போலிஸார் நடவடிக்கை எடுப்பதாகச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். ஆனால் புகார் கொடுத்து 33 நாட்களாகியும் போலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், ஆவேசமடைந்த செல்லப்பிரியாவின் உறவினர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

மருத்துவருக்கு ஆதரவாக கல்லூரி நிர்வாகம், அரசுத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோர் உடந்தையாக செயல்படுகின்றனர். எனவே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்ற வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, போலிஸார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் மறியலைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

Also Read: படிக்க நினைத்த மாணவியின் கனவை சிதைத்து கூலித்தொழிலாளியாக்கிய கல்லூரி : பதில் சொல்லுமா நிர்வாகம்?