Tamilnadu

கொலையை மறைக்க என்ஜினியர் போட்டுக்கொடுத்த மாஸ்டர் ப்ளான் : வங்கி SMS மூலம் மாட்டிக்கொண்ட குற்றவாளிகள்!

புதுக்கோட்டை மாவட்டம் கொண்டையன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கொஞ்சி அடைக்கன். அவர், தனது மனைவி மற்றும் மகளுடன் காஞ்சிபுரம் நகரில் தங்கியிருந்து இருங்காட்டுக்கோட்டையில் உள்ள ஹூண்டாய் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணிக்குச் சென்ற கொஞ்சி அடைக்கன் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி பழனியம்மாள் காஞ்சிபுரம் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலிஸார், விசாரணை நடத்தி வந்தனர். காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி., டி.சண்முகபிரியாவின் உத்தரவின் பேரில், போலிஸ் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தினர். கொஞ்சி அடைக்கன் காணாமல் போனது குறித்து போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், திடீரென பல மாதங்கள் கழித்து காணாமல் போன கொஞ்சி அடைக்கனின் வங்கிக் கணக்கில் இருந்து பணப் பரிவர்த்தனை நடந்திருக்கிறது.

இந்த தகவல் போலிஸாருக்கு தெரியவரவே, அவரது கணக்கில் இருந்து பண பரிவர்த்தனை செய்த புதுக்கோட்டையைச் சேர்ந்த ஏழுமலை என்ற நபரை போலிஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காணாமல் போன கொஞ்சி அடைக்கனை ஒரு கும்பல் கடத்திச் சென்று கொலை செய்து எண்ணெய் பேரலில் போட்டு சிமெண்ட் கலவையை அதில் போட்டு அடைத்து கிணற்றில் வீசியது விசாரணையில் அம்பலமாகியிருக்கிறது.

கொஞ்சி அடைக்கானுக்கும், அவரது உறவுக்கார பெண் 40 வயதான சித்ரா என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்திருக்கிறது. சில வருடங்கள் கொஞ்சி அடைக்கன் சித்ராவுடன் வசித்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக அவருடன் இருந்து பிரிந்து, மாரியம்மாளை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

பின்னர் குழந்தை மனைவியுடன் காஞ்சிபுரத்தில் வசித்து வந்த கொஞ்சி அடைக்கனிடம் சொத்து, பணம் கேட்டு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார் சித்ரா. இதனால் கொஞ்சி அடைக்கனுக்கும் சித்ராவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சித்ரா, கொஞ்சி அடைக்கனை கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளார்.

அதன் அடிப்படையில் சித்ராவின் மகன் 24 வயதான ரஞ்சித், அவரது நண்பன் 26 வயதான ஏழுமலை ஆகியோரிடம் தன்னுடைய கொலைத் திட்டத்தைப் பற்றிக் கூறியுள்ளார்.

பின்னர் மூவரும் சேர்ந்து ஒரு கூலிப்படையை வைத்து கொஞ்சி அடைக்கனை திட்டமிட்டு கொலை செய்துள்ளனர். சம்பவத்தன்று சித்ரா, கொஞ்சி அடைக்கனுக்குப் போன் செய்து மன்னிவாக்கத்திற்கு அருகில் உள்ள ஓர் இடத்திற்கு வரச் சொல்லி இருக்கிறார். சித்ராவின் பேச்சைக் கேட்டு அந்த இடத்திற்குச் சென்றுள்ளார் கொஞ்சி அடைக்கன். அங்கே மறைந்திருந்த ரஞ்சித், ஏழுமலை உள்ளிட்ட கூலிப்படையினர், கொஞ்சி அடைக்கனை சுற்றிவளைத்து காரில் கடத்திச் சென்றுள்ளனர்.

மன்னிவாக்கம் பாலத்தின் அருகே வைத்து கடத்திச் சென்ற கொஞ்சி அடைக்கனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். பின்னர் கொலை செய்த சடலத்தை மறைப்பதற்கு கூலிப்படையில் இருந்த சிவில் என்ஜினியர் ஒருவர் ஓர் ஆலோசனை கூறியிருக்கிறார்.

எண்ணெய் பேரல் ஒன்றில் சிமெண்ட் கலவையைப் போட்டு, அதில் கொலை செய்த கொஞ்சி அடைக்கனின் சடலத்தை போட்டு பேக் செய்து கிணற்றில் வீசிவிட்டால், சடலம் மேலே வராது, கொலை செய்ததைக் கண்டுபிடிக்க முடியாது என கூறியிருக்கிறார்.

அந்த திட்டத்தை நிறைவேற்ற உடனடியாக பேரலை வாங்கி வந்து சிமெண்ட் கலவையை அதில் போட்டு கொஞ்சி அடைக்கனின் சடலத்தையும் அதில் போட்டு பேக் செய்து மறைவாக வைத்துள்ளனர். மூன்று நாட்களுக்குப் பிறகு சிமென்ட் இறுகிய நிலையை அடைந்ததும், சலமங்கலம் கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு விவசாய கிணற்றில் கொஞ்சி அடைக்கன் சடலத்தை வைத்து சமாதி கட்டிய எண்ணெய் பேரலை வீசிவிட்டு தப்பிச் சென்றதாக போலிஸாரின் விசாரணையில் கூறியுள்ளார்.

ஏழுமலை அளித்த தகவலின் அடிப்படையில், வருவாய் அலுவலர் முன்னிலையில் கிணற்றில் வீசப்பட்ட எண்ணெய் பேரலில் இருந்த கொஞ்சி அடைக்கனின் உடலை காவல்துறையினர் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய சித்ரா, அவரது மகன் ரஞ்சித், அவரது கூட்டாளிகள் எழுமலை, தர்சன், விவேக், சதீஷ், சுப்பிரமணி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Also Read: “தி.மு.க MLA-க்கு நம்பியார் பாணியில் கொலை மிரட்டல்” : அசால்ட்டாக டீல் செய்த கன்னியாகுமரி மாவட்ட செயலாளர்!