Tamilnadu
வீடு கட்ட பணம் கொடுக்காததால் பெற்றோரை அடித்துக் கொன்ற மகன் : தருமபுரி அருகே அதிர்ச்சி சம்பவம்!
தருமபுரி மாவட்டம், பூச்செட்டிஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமச்சந்திரன் - சின்னராஜி தம்பதி. இவர்களுக்கு ராமசாமி என்ற மகனும், சுமதி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், ராமசாமி திருமணமாகி சொந்த கிராமத்திலேயே மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். மகள் சுமதிக்கும் திருமணமாகிவிட்டது.
இதையடுத்து, சின்னராஜியின் பெயரில் பி.அக்ரஹாரம் பகுதியில் இருந்த வீட்டு மனையை பாதியாகப் பிரித்து ஒரு பாகத்தை மகனுக்கும், மற்றொரு பாகத்தை மகளுக்கும் கொடுத்துள்ளார்.
பின்னர், ராமசாமி அந்த நிலத்தில் வீடு கட்ட நினைத்துள்ளார். இதற்காக, பெற்றோரிடம் பணம் கேட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ராமசாமி, பெற்றோரிடம் வீடு கட்ட பணம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்துள்ளது.
இதனால், ஆத்திரம் அடைந்த ராமசாமி அருகிலிருந்த இரும்பு கம்பியால் தாய் சின்னராஜியின் தலைப்பகுதியில் பலமாகத் தாக்கியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தந்தை மகனைத் தடுக்க முயன்றபோது அவரையும் அதே கம்பியால் தாக்கியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் இருவருக்கும் தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெள்ளத்தில் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெற்றோரைத் தாக்கிக் கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த ராமசாமி நள்ளிரவில் இண்டூர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
“திராவிட மாடல் ஆட்சி ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு பொற்காலம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
யாருக்காக செயல்படுகிறார் மோடி? : வரியை மீறி ரசியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கும் இந்தியா!
-
“பிற்போக்குத்தனமான ஒரு இயக்கம் உள்ளது என்றால் அது RSS தான்” - செல்வப்பெருந்தகை விமர்சனம்!
-
“இந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் நம் முதல்வர்” - துணை முதல்வர் புகழாரம்!
-
9 நாட்கள் சூரிய சக்தி தொழில் முனைவோர் குறித்த பயிற்சி.. எங்கு? எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!