Tamilnadu

“துப்பாக்கி முனையில் கைது.. பழி தீர்க்க நடந்த கொடூர கொலை” : தேர்தல் நேரத்தில் கொலைக்களமாகும் தமிழகம் !

சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சிவக்குமார். இவர் மீது கொலை கொள்ளை வழிப்பறி ஆள் கடத்தல் என 40க்கும் மேற்பட்ட வழக்குகள் மைலாப்பூர், ஜாம்பஜார், ராயப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. அதுமட்டுமின்றி சென்னை மாநகர காவல்துறை கணக்கெடுத்து வெளியிட்ட ரவுடிகளின் பட்டியலில், முக்கியமான ரவுடியாக இருந்தவர் தான் இந்த சிவக்குமார்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 4ம் தேதி வழக்கு ஒன்றிற்காக தேடப்பட்டு வந்த மயிலாப்பூர் சிவகுமார், உத்தரமேரூரில் தனது சகோதரி வீட்டில் தலைமறைவாக இருந்தபோது போலிஸார் துப்பாக்கி முனையில் அவரை கைது செய்தனர். அப்போது அவரிடமிருந்து பல்வேறு பயங்கரமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில் ஜாமினில் வெளியே வந்த மயிலாப்பூர் சிவகுமார், சென்னை அசோக் நகர் போஸ்டல் காலனி 2வது தெருவில் அலுவலகம் வைத்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ஜஸ்டின் என்பவருக்கு 10 லட்சம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். அந்த கடன் தொகையை வசூலிப்பதற்காக, ஜஸ்டினின் அலுவலகத்திற்கு நேற்று சென்றிருக்கிறார் ரவுடி சிவக்குமார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த ஒரு மர்ம கும்பல், ரியல் எஸ்டேட் அலுவலகத்திற்குள் புகுந்து ரவுடி சிவகுமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்த நிலையில், பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அசோக் நகர் போலிஸார் உயிரிழந்த ரவுடி சிவகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், இதுகுறித்து போலிஸார் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அதில் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்து தொழிலதிபர் ஜஸ்டின் அலுவலகத்திற்குள் நுழைவதும்... பின்னர் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறி வாகனங்களில் கிளம்பிச் செல்வதும் பதிவாகி இருக்கிறது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கைப்பற்றிய சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலிஸார் நடத்திய தொடர் விசாரணையில், 2001ம் ஆண்டு ஜாம்பஜார் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி தோட்டம் சேகர் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலைச் சம்பவத்தில் ரவுடி சிவக்குமாருக்கும் தொடர்பு இருந்திருக்கிறது.

தோட்டம் சேகரின் கொலைக்கு பழிக்குப் பழியாக 20 ஆண்டுகள் கழித்து அவருடைய கூட்டாளிகள் ரவுடி சிவக்குமாரை திட்டம் போட்டு கொலை செய்திருப்பதாக தெரியவந்திருக்கிறது. இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக அசோக்நகர் போலிஸார் சிசிடிவி கேமராவில் பதிவான நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: “தடுப்பூசி சேவையை எக்காரணம் கொண்டும் வர்த்தக நோக்கில் அணுகக்கூடாது” : தினகரன் தலையங்கம் வலியுறுத்தல்!