Tamilnadu

போலிஸ் முன்னிலையிலேயே பரிசுப் பொருட்கள் விநியோகம் : வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள் - தி.மு.க MLA கண்டனம்!

தேர்தல் நடத்தை விதிகளுக்குப் புறம்பாக அ.தி.மு.கவினர் பரிசுப் பொருட்களை காவல்துறை அதிகாரிகள் முன்னிலையிலயே வழங்குவதாக கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தல் விதிமுறைகளுக்குப் புறம்பாக பரிசுப் பொருள்கள் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையிலேயே வழங்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

பறக்கும் படை, காவல்துறையினரிடம் புகார் அளித்தாலும் கூட அவர்கள் கண்டு கொள்வதில்லை - கால தாமதம் செய்து சம்பவ இடத்திற்கு வருகிறார்கள். ஆகவே உடனடியாக சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து இடங்களுக்கும் பறக்கும்படை, ரோந்து ஆகியவற்றை கூடுதலாக பெற்று சிங்காநல்லூர் , கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் பரிசுப் பொருள்கள் விநியோகத்தை தடுக்க கூடுதல் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நேற்று (மார்ச் 1) கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பீளமேடு 39வது வார்டு பீளமேடு மேம்பாலம் அருகே நேரு நகர் பகுதியில் பா.ஜ.கவை சேர்ந்த நடராஜன் என்பவரது வீட்டில், அ.தி.மு.க வார்டு செயலாளர் மனோகரன் என்பவருக்கு சொந்தமான மாருதி 800 காரில் ( TN 02 w_3056 ) பொதுமக்களுக்கு வழங்க ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி படம் பொறித்த காரில் வேட்டி, சேலை, சில்வர் தட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தி.மு.கவினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தி.மு.கவினரை அப்புறப்படுத்திவிட்டு, அப்பகுதி அ.தி.மு.கவினரிடம், பொருட்களை விநியோகம் செய்யுமாற் கூறியதற்கான வீடியோ பதிவு ஆதாரம் எங்களிடம் உள்ளது.

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் இருக்கும்போதே அதிகார துஷ்ப்ரயோகம் செய்து அ.தி.மு.கவினருக்கு உறுதுணையாக காவல்துறை செயல்பட்டது. ஆகவே தேர்தல் ஆணையம் விதித்த சட்ட விதிகளின்படி தேர்தல் முறையாக நடைபெறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “நீங்கள் வன்கொடுமை செய்த பெண்ணை திருமணம் செய்ய சம்மதித்தால் ஜாமின்” : உச்சநீதிமன்றம் சர்ச்சை கருத்து!