Tamilnadu

“பழக்கதோஷம் இன்னும் போகலை போல” : காலில் விழ முயன்ற ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு அறிவுரை கூறிய பிரதமர் மோடி!

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க-வுடன் தாம் கூட்டணி கட்சி என்ற நிலைமாறி, தாங்களும் பா.ஜ.கவின் ஒரு அங்கம் என்பது போலவே தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.கவினஎ செயல்படுகின்றனர். அவ்வப்போது தங்களின் செயல்பாடுகளை முழுக்க முழுக்க பா.ஜ.கவின் இந்துத்வா கருத்தியலை ஏற்று செயல்படுத்தி வந்தது அ.தி.மு.க அரசு.

அ.தி.மு.க என்றாலே தன்மானம் இழந்து சுயமரியாதையை விட்டுக்கொடுத்துவிட்டு, தங்களின் எஜமானர்களிடம் கூனிக்குறுகி காலில் விழுந்துகிடப்பவர்கள் தானே என மக்கள் மத்தியில் பேசப்பட்டு வந்த, அ.தி.மு.கவினர் தற்போது மூன்றாவது எஜமானரான மோடியில் காலடியில் விழுந்து கிடக்கும் நிகழ்வு அரங்கேறி வருகிறது.

பிறப்பின் அடிப்படையில் ஒருவரை தள்ளிவைத்து பார்க்கும் கொள்கை கொண்ட பா.ஜ.கவின் தலைவர்களுக்கு, திடீரென ஒரு கும்பல் காலில் அடுத்தடுத்து விழுந்ததும் இது என்ன வேடிக்கை என்று திகைத்துப் போய்விட்டார்கள்.

சமீபத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கோவை வந்த பிரதமர் மோடியை வரவேற்க ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அ.தி.மு.க அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் சென்றிருந்தனர். அப்போது, பிரதமரை வரவேற்க நின்று கொண்டிருந்த, தேனி எம்.பி.யும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத், பிரதமரின் காலில் விழ முற்பட்டார்.

அவரைத் தடுத்து நிறுத்திய பிரதமர் மோடி, காலில் விழக்கூடாது என அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதேபோல, மற்றொரு அ.தி.மு.க எம்.பி.யும் பிரதமர் காலில் விழ முற்பட்டபோது, தடுத்து நிறுத்தினர். அ.தி.மு.கவினரின் இத்தகைய காலில் விழும் நடவடிக்கையால் தமிழகத்தின் மீது மற்ற மாநிலத்தவர் வைத்திருந்த நன்மதிப்பு சிதைந்து போனதாக பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

Also Read: “தமிழக நிதிநிலையை சரிசெய்ய அடுத்து வரும் அரசுக்கு 3 ஆண்டுகள் தேவைப்படும்” - நிதித்துறை செயலர் தகவல்!