Tamilnadu

“பயிற்சி ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்கும் அ.தி.மு.க அரசு” : மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம்!

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் சார்பில் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்கிறது. இந்த நிலையில் அரசுடனான பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறி நிலவுவதால் தொ.மு.ச, சி.ஐ.டி.யு உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் நேற்று பல்லவன் இல்லத்தில் உள்ள அலுவலகத்தில் அவசர ஆலோசனை ஈடுபட்டனர்.

இந்த ஆலோசனைக்கு பிறகு தொ.மு.ச பொதுச்செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் 95% பேருந்துகள் இன்று இயங்கவில்லை. 19 மாதங்களாக எந்த பேச்சுவார்த்தையும் நடத்தாமல் தொழிலாளர்களுக்கு மிகப்பெரும் அதிருப்தியை ஏற்படுத்தினர்.

இடைக்கால நிவாரணம் அறிவித்துள்ளனர். ஆனால், அந்த அறிவிப்பில் எந்த தேதியிலிருந்து கிடைக்கும், யாருக்கெல்லாம் கிடைக்கும் என்ற தெளிவு இல்லை. இதுவரை தொழிற்சங்ககளை அழைத்து பேசாமல் தொழிலாளர்களுக்கு எதிரான அரசு இது என்பதனை உணர்த்துகின்றனர்.

எனவே, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை எங்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடரும். அடுத்தகட்டமாக அனைத்து பேருந்து பணிமனைகளிலும் ஆர்பாட்டம் நடைபெறும். அதேபோல், பயிற்சி இல்லாத தற்காலிக ஊழியர்களை வைத்து பேருந்துகளை இயக்குவது பொதுமக்களுக்கு தான் சிரமம் ஏற்படுத்தும்.

நேற்றுக் கூட சென்னை யானைகவுனி பகுதியில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய பேருந்து பக்கசுவற்றில் மோதியுள்ளது. அதே போல் நெய்வேலியில் காவல்துறை வாகனம் மீது மோதிவிட்டு அரசு பேருந்தை சம்பவ இடத்தில் விட்டுவிட்டு ஓட்டுநர் தலைமறைவாகிவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சென்னையில் பல பேருந்து நிலையங்களில் காலை முதலே மக்கள் பெருந்திரளாக கூட்டம் கூட்டமாக நின்று வருகின்றனர். அதேபோல் போதிய பேருந்து இன்மையால் பேருந்துகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர்.

Also Read: “முதல்வர் பழனிசாமியின் வறண்ட இதயத்தை அரசு ஊழியர்கள் என்றும் மறக்க மாட்டார்கள்” : மு.க.ஸ்டாலின் சாடல்!