Tamilnadu

தனியார் நிதி நிறுவனத்தின் அடாவடி : கெஞ்சிக் கேட்டும் மனமிரங்காததால் விபரீத முடிவெடுத்த ஆட்டோ ஓட்டுநர்!

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்தவர் பழனிவேல். இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர். வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஓட்டிவந்த பழனிவேல் 2019ம் ஆண்டு சொந்தமாக லோடு ஆட்டோ வாங்கியுள்ளார். இதற்காக அவர், நெல்லை ஸ்ரீபுரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 3 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார், இதற்கு மாதம் 11,500 தவணை கட்டி வந்துள்ளார்.

இந்நிலையில், கொரோன ஊரடங்கு காரணமாக, பழனி வேலுக்குச் சரியாக சவாரி கிடைக்காததால், சில மாதங்களாக தவணைத் தொகை கட்டாமல் இருந்துள்ளார். இதனால் தனியார் நிதி நிறுவனம் தவணையை கட்டச் சொல்லி, பழனிவேலை தொந்தரவு செய்தது.

அப்போது அவர், பணம் கிடைத்ததும் பழைய பாக்கியையும் சேர்த்துக் கொடுத்து விடுவதாக தெரிவித்து வந்துள்ளார். ஆனால் அதை ஏற்காத நிதி நிறுவனம், கடந்த வாரம் ஆட்டோவை பறிமுதல் செய்துள்ளது. இது குறித்து தனியார் நிதி நிறுவனத்திடம் சென்று கேட்டுள்ளார். அப்போது, அங்கிருந்தவர்கள், பழனிவேலை அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் அவர் மனவேதனையடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மீண்டும் நிதி நிறுவன அலுவலகத்திற்குச் சென்று ஆட்டோவை கேட்டுள்ளார். அப்போதும் அவரை கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதனால் மன விரக்தியடைந்த பழனிவேல், தான் கையோடு எடுத்து வந்த, மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார்.

உடல் முழுவதும் தீப்பற்றியதும் கதறித் துடித்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்றுவந்த பழனிவேல் புதன்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து தனியார் நிதி நிறுவனம் கொடுத்த அழுத்தத்தால்தான் பழனிவேல் உயிரிழந்ததாகக் கூறி அவரது உறவினர்கள் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டனர். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2 வாரத்தில் மட்டுமே கடன் தொல்லையால் ஒரு விவசாயி உட்பட 2 தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read: முதலில் பீலா இப்போது கணவர் ராஜேஷ்: எடப்பாடியின் ஊழல் ஆட்சியின் நிழலாக வலம் வந்த இருவர்-சிக்கியதன் பின்னணி