Tamilnadu

பட்டப்பகலில் பள்ளி மாணவனை கடத்திய கும்பல் : சில மணி நேரத்திலேயே போலிஸிடம் சிக்கியது எப்படி?

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் காய்கறி வியாபாரியான மாரியப்பன். இவரது மகன் கணேசன் செங்குன்றத்தில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த கணேசனை, காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றிருக்கிறது.

அங்கிருந்த பொதுமக்களும் மாணவர்களும் காரை விரட்டிப் பிடித்ததில், கடத்தல்காரர்களில் ஒருவர் அவர்களிடம் சிக்கினார். அவரைப் பிடித்து பொதுமக்கள் செங்குன்றம் போலிஸில் ஒப்படைத்தனர். போலிஸார் அவரிடம் நடத்திய விசாரணையில், மாணவனை கடத்தியது அவரது உறவினர் ஒருவர்தான் என்ற திடுக்கிடும் தகவல் வெளியானது.

மாணவன் கணேசனின் அக்கா ஜனனியும், அவரது அத்தை மகனான புதுக்கோட்டையை சேர்ந்த பூபதி என்பவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டுள்ளனர். ஜனனியின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதையும் மீறி ஜனனியை அழைத்துச் சென்று பூபதி திருமணம் செய்துகொண்டதோடு புதுக்கோட்டையில் வைத்து குடும்பம் நடத்தி வந்திருக்கிறார்.

இந்த நிலையில், தனது மகள் புதுக்கோட்டையில் இருப்பதை தெரிந்துகொண்ட மாரியப்பன், பூபதிக்கு தெரியாமல் தனது மகளை சென்னைக்கு தனது வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பூபதி, தனது மனைவியை தன்னிடம் இருந்து பிரித்து அழைத்துச் சென்ற மாரியப்பனை பழிவாங்க இந்த கடத்தல் திட்டத்தை தீட்டியிருக்கிறார். அதன்படி, பூபதி தனது நண்பர்களான மணிகண்டன், சீனிவாசன், ஆதித்யா, சக்திவேல், சந்தோஷ் குமார் ஆகியோருடன் புதுக்கோட்டையில் இருந்து காரில் சென்னைக்கு வந்து மாணனை கடத்தியதாக போலிஸாரின் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

பின்னர், மாணவனை கடத்திச் சென்ற கும்பலைப் பிடிக்க தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவல் நிலையாங்களுக்கு செங்குன்றம் போலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் ஆத்தூர் சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலிஸார், சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு காரை நிறுத்தி விசாரணை செய்தபோது, காரில் மாணவன் கணேசன் இருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் இந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்து மாணவனை மீட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: மாவட்ட ஆட்சியருக்கு மரண வாக்குமூல கடிதத்தில் கோரிக்கை வைத்த விவசாயி : கோவை அருகே சோகம்!