Tamilnadu

ஆளும் கட்சிக்காரங்களுக்குத்தான் கடன் தள்ளுபடியா?: எடப்பாடி அரசின் வெற்று அறிவிப்பால் கலங்கும் விவசாயிகள்!

'வெல்லம் திங்கிறது ஒருத்தன் விரல் சூப்பறது இன்னொருத்தனா' என சொலவடை சொல்வார்கள். தமிழக அரசின் பயிர்க்கடன் விவகாரத்திலும் அதுதான் நடந்துள்ளதென கொந்தளிக்கின்றனர் விவசாயிகள். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்கள் 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் இதனால் 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பலனடைவார்கள் எனவும் சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி.

விவசாயிகளும் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பல முறை இதனை வலியுறுத்தியபோது, மறுத்து வந்த அ.தி.மு.க அரசு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் கடன் தள்ளுபடி என அறிவித்ததில் அரசியல் நோக்கம் இருந்தாலும், இனியாவது விவசாயிகளின் வாழ்வு மலர்ந்தால் நல்லது தான் என்பதே பொதுவான பார்வை. விவசாயிகளிடம் மாறுபட்ட பார்வை உள்ளது.

மன்னார்குடி ரெங்கராஜன், பி.ஆர்.பாண்டியன் போன்ற விவசாயிகளின் பிரதிநிதிகள் முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்திருந்தாலும், “இதில் உள்ள அரசியல் நோக்கத்தையும் மறுப்பதற்கில்லை என்கிறார்கள் விவசாயிகள். வரலாறு காணாத வகையில் வெளுத்து வாங்கிய நிவர் புயலாலும், புரெவி புயலாலும் பேரழிவைச் சந்தித்த டெல்டா விவசாயிகளுக்கு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதுபோல மார்கழி மாதம் பெய்த தொடர் கனமழையில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த மொத்த நெற்பயிர்களும் பாதிக்கப்பட்டுவிட்டது.

வேதனையில் தவித்த விவசாயிகள் தற்கொலை நிலைக்குச் சென்றனர். இப்படிப்பட்ட நிலையில், அவர்களுக்கு பெரும் ஆறுதலாக இருந்திருக்க வேண்டும் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு. கேட்பதற்கு இனிப்பாகத் தெரிந்தாலும் உண்மையான விவசாயிகளைவிட, விவசாயிகளின் போர்வையில் ஆளுங்கட்சியினரே முழுப்பலனையும் அனுபவிக்கப் போகிறார்கள்” என குமுறுகிறார்கள் விவசாயிகள். அதற்கேற்ப, அறிவிப்பு வெளியானதும் உண்மையான விவசாயிகளைவிட அ.தி.மு.க.வினரும் அவர்களின் ஆதரவுக்கட்சியினரும், பெரும் முதலாளிகளுமே பட்டாசுவெடித்து இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். காரணம், அவர்கள் தான் பெருமளவில் கடன் வாங்கியுள்ளனர். குறு, சிறு விவசாயிகள் இந்த அறிவிப்பினால் தங்களுக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது எனத் தெரியாமல் உள்ளனர்.

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன் கூறுகையில், “ஐந்து ஆண்டுகளாகவே கூட்டுறவு வங்கிகளில் உண்மையான விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்படுவதில்லை. அ.தி.மு.க.வினரே பயனடைந்தனர். 80 சதவிகித விவசாயிகள் சாகுபடி செய்வதற்காக தேசிய மற்றும் வணிக வங்கிகளிலும், கந்து வட்டி அடகுக் கடைகளிலுமே கடன் வாங்கியுள்ளனர். 20 சதவிகிதம் விவசாயிகள் தான் கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கியுள்ளனர். அந்த 20 சதவிகிதத்திலும் ஆளும் கட்சியினரும், அவர்களின் பின்புலம் உள்ளவர்களும், மிகவும் வசதிபடைத்தவர்களும், வரி ஏய்ப்பு செய்து கணக்குக் காட்டுவதற்காக விவசாயம் செய்பவர்களும்தான் அதிகளவில் கடன் பெற்றுள்ளனர்.

அவர்களுக்குத்தான் தற்போதைய தள்ளுபடி சாதகமாக இருக்கும். ஏற்தனவே பலவழிகளில் ஊழல் செய்து பணம் சேர்த்தது போதாது என பயிர்க்கடன் தள்ளுபடியாகும் என ஆளாளுக்கு பல லட்சம் ரூபாய் கடன்பெற்று தற்போது பலனடை கிறார்கள். விவசாயத்தை மட்டுமே முழுநேர வாழ்வாதாரமாகக் கொண்ட உண்மையான விவசாயிகளில் பெரும்பாலானோருக்கு இந்த அறிவிப்பினால் பலன் இல்லை. தேசிய மற்றும் வணிக வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும்'' என்கிறார் வேதனையுடன்.

திருவாரூர் மாவட்டம் கொத்தங்குடி பகத்சிங் கூறுகையில், “சாகுபடிக்காகத் தான் பயிர்க்கடன் வழங்கப்படுகிறது என்கிற நிலையை கடந்த ஐந்து ஆண்டுகளில் அ.தி.மு.க. அரசு மாற்றிவிட்டது. கூட்டுறவு சங்கங்கள் முழுவதும் அ.தி.மு.க.வினரின் கட்சி அலுவலகமாகவே மாறிவிட்டது. அ.தி.மு.க.வினர் மட்டுமே கடன் பெற்றுள்ளனர். அ.தி.மு.க.வினரே நிர்வாகத்தில் இருப்பதால் சாகுபடியே செய்யாமல் சும்மா கிடக்கும் நிலங்களுக்கும் குறுக்கு வழிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ளனர். சிறு,குறு விவசாயிகளுக்கு அ.தி.மு.க. ஆட்சிவந்த காலம் முதலே கடன் கிடைக்காமல் போய் விட்டது. இதுவரை மூன்றுமுறை கூட்டுறவு சங்கங்களில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் பாதிக்குப்பாதியாவது விவசாயிகள் இருந்தனர். இந்த முறை முழுப்பலனையும் அ.தி.மு.க.வினரே அனுபவிக்கப் போகிறார்கள்” என்கிறார்.

தஞ்சை மாவட்டம் திருவையாறைச் சேர்ந்த விவசாயி கக்கரை சுகுமாறன் கூறுகையில், “தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகக் குழுவில் கடந்தஆறு ஆண்டுகளாக ஆளும் அ.தி.மு.க.வினர்கள்தான் பதவி வகிக்கிறார்கள். குறிப்பாக சொசைட்டி தலைவர் துணைத் தலைவர் இயக்குநர் உள்ளிட்ட எல்லாபதவிகளையும் அ.தி.மு.க.வினரே வைத்துள்ளனர். கூட்டுறவு சங்கங்களில் எந்த முறைகேடுகள் நடந்தாலும்கேள்வி கேட்க சம்பிரதாயத்திற்குக்கூட ஆள் கிடையாது. கடன் சங்கத்தின் விதிப்படி விவசாயிகுடும்பத்திற்கு அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் தான் பயிர்க்கடன் கொடுக்கனும். ஆனால் நிர்வாகக் குழுவில் உள்ள அ.தி.மு.க.வினர் குடும்பத்தில் உள்ள பலரது பெயரிலும் பினாமிகள் பெயரிலும் பல லட்சம் ரூபாய்கடன் வாங்குகிறார்கள்.

தற்போதும் வாங்கியுள்ளார்கள். பயிர்க் கடன் வாங்குவதற்கு கிராம நிர்வாக அலுவலர்களிடம் சிட்டா அடங்கல் வாங்கிக்கொடுக்கனும் அதையும் மீனியலுக்கு நூறு இருநூறு லஞ்சம்கொடுத்து எத்தனை விதமாக யார் யார் பெயரில் வேண்டுமானாலும்சிட்டா அடங்கலைப் பெற்று ஒரே நிலத்துக்குரிய சர்வே நம்பரை பயன்படுத்தி பலதொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்குகிறார்கள்.

சாகுபடி செய்யாமல் சும்மா கிடக்கும் நிலங்களையும் அவர்கள் விட்டுவிடவில்லை. வெளியூர்களில் இருப்பவர்களின் நிலங்களின் சர்வே நம்பரை பயன்படுத்தி குத்தகைக்கு சாகுபடி செய்கிறோம் என்று கூறி பயிர்க்கடன் வாங்கியுள்ளனர். இதுபோல பல வழிகளில் மோசடிகள் நடந்துள்ளன. அவர்களின் கடன்தான் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உண்மையான விவசாயிகளுக்கு கடன் கிடைக்கவில்லை, கடன் தள்ளுபடி பயன்களும் கிடைக்காமல் போகிறது” என்கிறார்.

காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர்களுள் ஒருவரான காவிரிதனபாலன் கூறுகையில், “கொரோனாமற்றும் நிவர் மற்றும் புரெவி புயலாலும் மார்கழி மாதம் எதிர்பாராமல் பெய்ததொடர் மழையாலும் பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கடுமையான மன உளைச்சலில் இருந்தார்கள். பெரும்பாலான விவசாயிகள் கடும் நஷ்டத்தைச் சந்தித்துவிட்டனர் என்பதை உணர்ந்து இந்த நேரத்தில் கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகியிருப்பது மிகுந்த ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. அறிவிப்பிற்கு அரசுக்கு நன்றியைக் கூறுகிறோம். ஆனால் உண்மையான விவசாயி பலனடைந்துள்ளார்களா என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.

கூட்டுறவு சங்க பங்களிப்பு என்பது நூறு ஏக்கருக்கு கடன் கேட்டால் 11.33 க்குத்தான் டெல்டாவில் கிடைக்கிறது. மற்ற ஏரியாக்களில் 9 ஏக்கருக்கு மட்டுமே கிடைக்கிறது. ஆக 20 சதவிகிதம் மட்டுமே கூட்டுறவு மூலம் கடன் கிடைக்கிறது. அதையும் ஆளும் கட்சி யினரே பெற்றுவிடுகின்றனர். மற்ற 80 சதவிகிதம் விவசாயிகள் கந்து வட்டிக்கடை, மற்ற அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் கடன்பெற்றுள்ளனர்.

தற்போதைய அறிவிப்பில் உள்ள 16.43 லட்சம் பேரில் 14 லட்சம் பேர் அ.தி.மு.க.வினரே மறைமுகமாக பலனை அனுபவித்துள்ளனர். மற்ற அனைவருமே கண்ணீர்க் கடலில் மிதக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆகவே ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களைப். போல தமிழக அரசும் கடன்தள்ளுபடி செய்யவேண்டும்” என்கிறார்.

- நன்றி நக்கீரன்.

Also Read: மாமூல் வாங்கியவர்களை தட்டிக் கேட்ட வணிகர் சங்கத் நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு - சென்னையில் அவலம்!